வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (09:30 IST)

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

2016 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. தமிழக ஆளுநர் ரோசய்ய இன்றைய கூட்டத்தில் உரையாற்றுகிறார், அவரது உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.


 
 
சென்னை மழை வெள்ளம், நிவாரணம், செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
 
ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரை முடிந்ததும் சபாநாயகர் தனபால் அலுவல் ஆய்வு குழுவை கூட்டி இந்த கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்தலாம் என முடிவெடுப்பார்.
 
அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும் போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மீது விவாதம் நடக்கும். பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசுவர், பின்னர் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசுவார். பின்னர் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்
 
இந்த கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சனைகளாக, சென்னை மழை வெள்ளம், நிவாரண பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு, செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம், மதுவிலக்கு, ஜல்லிக்கட்டு விவகாரம், மீனவர் பிரச்சனைகள் போன்றவை எதிர் கட்சிகளால் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.