1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2015 (01:25 IST)

ஜாதி சான்றிதழ் விவகாரம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகளை அவதூறாக பேசிய அரசு அதிகாரிகள் வரும் 24ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
தர்மபுரியை சேர்ந்த பெருமாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், குரும்பர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அரசு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். எனவே, தகுந்த ஆவணங்கள் உள்ளவர்களுக்கு ஜாதி சான்றிதழ் உடனே வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் குரும்பர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது.
 
ஆனால், குரும்பர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அரூர் வருவாய்துறை கோட்டாட்சியர் கவிதா மறுத்துவிட்டார். இது குறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் அண்ணாமலையிடம் புகார் அளித்தார். அப்போது அவர்  நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் குறித்து  அவதூறாக பேசியுள்ளார்.
 
இதனால்,  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் அண்ணாமலை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெருமாள் கோரியிருந்தார். மேலும், ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலை பேசிய செல்போன் பேச்சு அடங்கிய பதிவை பெருமாள் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
 
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சதீஷ் குமார் அக்னிஹோத்ரி மற்றும் தேவதாஸ் ஆகியோர் அரூர் வருவாய்துறை கோட்டாட்சியர் கவிதா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலை ஆகியோருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
மேலும், கவிதா மற்றும் அண்ணாமலை ஆகியோர் வரும் 24 ஆம் தேதி நீதி மன்றத்தில் நேரில் ஆஜராஜி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.  அத்துடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை குற்றவியல் வழக்காக ஏன் எடுத்து கொள்ள கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தமிழகத்தில் சமீபகாலமாக ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் தொடர்ந்து நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகிவருகின்றனர்.