முதலமைச்சர் விஜய் வாயை திறந்தால் பல பேருக்கு ஆபத்து.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற காங்கேயம் நாட்டு மாடுகள் அழகு போட்டிகள் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் நல்லதொரு ஆட்சி மலர்ந்துள்ளதாகவும், வரவிருக்கும் காலம் பொற்காலமாக அமையும் என்றும் தெரிவித்தார். மேலும் டெல்டா விவசாயிகளை வாழ வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு செங்கல்லை கூட அங்கு வைக்க தமிழக அரசு அனுமதிக்காது என்றும், தமிழகத்தின் உரிமைகள் எப்போதும் நிலைநாட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதில் விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களும் நிலைநாட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் அமைதியாக இருப்பது குறித்து பேசிய அவர், முதலமைச்சர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால்தான் அவர் அமைதியாக இருக்கிறாரே தவிர வேறு எதுவும் இல்லை என்றார். காவிரி நீர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்துதான் செயல்பட்டு வருவதாகவும், அதில் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுபடுத்தினார்.
Edited by Siva
