அட்மிஷன் முதல் தேர்வு முடிவுகள் வரை அனைத்தும் ஆன்லைனில்.. கல்லூரி மாணவர்கள் நிம்மதி...
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் நீண்ட கால துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் CMS 2.0 மேம்படுத்தப்பட்ட புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அட்மிஷன், கட்டணம் செலுத்துதல், வருகைப்பதிவு அறிதல், ஹால் டிக்கெட் மற்றும் மாற்றுச்சான்றிதழ் பெறுதல் போன்ற அவசியமான தேவைகளுக்காக மாணவர்கள் கல்லூரி அலுவலகங்களிலும் வங்கிகளிலும் பல நாட்கள் வரிசையில் நின்று அவதிப்பட்டு வந்தனர்.
இனி அத்தகைய அலைச்சல்களுக்குத் தீர்வு காணும் வகையில், அட்மிஷன் முதல் தேர்வு முடிவுகள் வரை அனைத்து சேவைகளும் ஒரே கிளிக்கில் ஆன்லைனில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது கட்டணங்களை UPI மற்றும் நெட் பேங்கிங் மூலம் வீட்டிலிருந்தே செலுத்தலாம்; வருகைப் பதிவு மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண்கள் பெற்றோர்களின் மொபைல் எண்களுக்கு உடனுக்குடன் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும், டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய சான்றிதழ்களை எளிய முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தில் கூடுதலாகத் தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் சர்வர் பழுது போன்ற சிக்கல்கள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். ஏழை எளிய மாணவர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்த டிஜிட்டல் புரட்சி, தமிழக அரசு கல்வித்துறையில் கொண்டுவந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.

