வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (00:31 IST)

விவசாயிகளின் தற்கொலையை தமிழக அரசு மூடி மறைக்கிறது:- விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளின் தற்கொலையை தமிழக அரசு மூடி மறைக்கவும், திசை திருப்பும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.


 

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:--
 
தமிழகத்தில், அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலையே இல்லை என்று வேளாண்மைதுறை அமைச்சர் சட்ட மன்றத்தில் தெரிவித்திருப்பது இமயமலையை இலைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கும் செயல்.
 
மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் நவீன தாராளமயக் கொள்கையின் விளைவாக நாடு முழுவதும் நாளுக்கு நாள் விவசாயகள் தற்கொலை அதிகரித்து வருகிறது.
 
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், தனியாரிடம் கடன் பெற்று விவசாயம் செய்வதுதான் தற்கொலைக்கு காரணம்.
 
தமிழ்நாட்டில் 2012-13ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாகவும், காவிரி டெல்டா பாசனத்திற்கு கர்நாடக அரசு போதிய தண்ணீர் விடாத காரணத்தாலும் 20 விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியினால் மாண்டு போனார்கள்.
 
விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு தமிழகத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்ததுடன், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கியது. மீதி 11 குடும்பங்களுக்கு தர மறுத்துவிட்டனர்.
 
இந்த நிலையில் 2015ம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி சம்பந்தம், திருவாரூர் மாவட்டம் பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த பருத்தி விவசாயி மதியழகன், சித்தன்பாழூர் கிராமத்தை சார்ந்த பருத்தி விவசாயி ராஜாராமன், தேனி மாவட்டம் உப்புக் கோட்டையைச் சேர்ந்த வாழை விவசாயி அழகுவேல் ஆகியோர் பயிர் இழப்பு, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
 
ஆனால், தமிழக அரசு விவசாயிகளின் தற்கொலையை மூடி மறைக்கவும், திசை திருப்பும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
 
தற்கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அவர்கள் மரணத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
 
தமிழக அரசின் இத்தகைய விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்தும், விவசாய நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
 
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்படட விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.
 
இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் பங்கேற்கும் போராட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையில் வள்ளூவர் கோட்டம் அருகில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.