வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (08:57 IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையினாரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


 

 
இது குறித்து நரேந்திரமோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள், தொடர்ந்து நடைபெற்று வருவதை, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
 
சமீபத்திய நிகழ்வாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதாப்பட்டினம் ஆகிய மீன்பிடித்தளத்திலிருந்து 2 எந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (நேற்று) அதிகாலை கைதுசெய்யப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 
 
பாக் நீரிணை பாரம்பரிய கடல்பகுதியில், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய வரலாற்று ரீதியிலான மீன்பிடிக்கும் உரிமைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. 
 
தமிழக மீனவர்களை கைது செய்வது மற்றும் தாக்குவதன் மூலம், அவர்களுக்குரிய பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை தடுக்கும் முயற்சியில் இலங்கை கடற்படை அடிக்கடி ஈடுபட்டு வருகிறது.
 
மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகள் மூலம் இத்தகைய போக்கினை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் அவசியம்.
 
இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லைக் கோடு தொடர்பான விவகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்திடம் உள்ளதை பிரதமர் நன்கு அறிவார்.
 
1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தங்கள், அரசியல் சாசன ரீதியாக செல்லத்தக்கவையா? என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாம் வழக்கு தொடர்ந்துள்ளதையும், இதனைத்தொடர்ந்து தமிழக அரசும் இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
 
மீனவர்களின் துயரத்தினை உணர்ந்து கொண்ட தமது தலைமையிலான அரசு, ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான பல்வேறு புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
 
நாட்டிலேயே முதன்முறையாக, தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான படகுகளை வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் சிறப்பானதொரு திட்டத்தை, தமது அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
 
தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கேற்றவாறு தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான 171 படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 581 மீனவக் குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவார்கள்.
 
ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கான பராமரிப்புக்காக, ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் தொடர் மானியத்துடனான, ரூ.1,520 கோடி மதிப்பீட்டிலான விரிவானதொரு திட்டத்திற்காக, மத்திய அரசின் நிதியுதவியை தாம் கோரியிருந்தேன் என்பதை நினைவு படுத்துகிறேன்.
 
தமிழக அரசின் இத்திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து அனுமதி வழங்க வேண்டும். பிடித்து வைத்த தமிழக மீனவர்களை விடுதலை செய்த பிறகும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை விடுவிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையால், பல தமிழக மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
நம்பிக்கை இழக்கும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதை, தொடர்ந்து தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த ஆண்டு நீடித்துவரும் மிக மோசமான வடகிழக்குப் பருவமழை காரணமாக, நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகளும், மீன்பிடி சாதனங்களும் மொத்தமாக அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தப் பிரச்னைக்கும் விரைந்து தீர்வு காணவேண்டியுள்ளது. 
 
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக். நீரிணைப்பகுதியில், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்துவரும் இந்த துயரமான நிலைக்கு, நிரந்தரமான தீர்வுகாண உரிய நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமான வகையில் பிரதமர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
 
இதனிடையே, இலங்கை கடற்படையினரால் இன்று பிடித்துச் செல்லப்பட்ட 8 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 2 படகுகள் உட்பட, இலங்கை வசமுள்ள 37 மீனவர்கள் மற்றும் 55 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க, இலங்கை அதிகாரிகளிடம் திட்டவட்டமான, உறுதியான முறையில் இப்பிரச்னையைக் கொண்டுசெல்ல இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு, பிரதமர் உத்தரவிட வேண்டும்.
 
கடந்த 8 ஆம் தேதி விசைப்படகு பழுதாகி, இலங்கைக் கடற்பகுதியில் கரை ஒதுங்கி, அங்கேயே தவித்துவரும் 4 தமிழக மீனவர்களையும் விரைந்து தாயகம் அழைத்து வர, பிரதமர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.