புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 21 ஜூலை 2025 (15:41 IST)

அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. அப்பல்லோ நோக்கி விரையும் குடும்பத்தினர்.. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து துரைமுருகன்..!

அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. அப்பல்லோ நோக்கி விரையும் குடும்பத்தினர்.. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து துரைமுருகன்..!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கலந்து கொள்வதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
 
இன்று காலை நடைப்பயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
 
மருத்துவர்கள் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதை தொடர்ந்து, அவர் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். அதேபோல், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
 
முதல்வரின் உடல்நிலை குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இன்றைக்கு மாலை கூட அவர் வீடு திரும்பலாம்" என்று தெரிவித்தார். இது தொண்டர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.