தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்.. அரசியல் கட்சிகள் என்னென்ன செய்ய கூடாது?
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்த நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் உள்ள முதலமைச்சரின் படங்கள் மற்றும் அரசு திட்ட விளம்பரங்கள் அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.
பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கூடுதல் பணம் அல்லது பரிசு பொருட்கள் பிடிபட்டால் அவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சாதி, மத ரீதியாக வாக்கு சேகரிக்க கூடாது என்றும், வழிபாட்டு தலங்களை பரப்புரைக்கு பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva