விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

Mahalakshmi| Last Modified சனி, 11 ஜூலை 2015 (14:07 IST)
தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் வாழை, கரும்பு, தென்னை, வெற்றிலை போன்ற நீண்ட காலப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்தப் பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் காய்ந்து வருகிறது. இப்பகுதிகளில் வாழை சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. கடும் வெயில், வறட்சி காரணமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் இளம் கன்று வாழைகள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மொத்தம் சுமார் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். எனவே காவிரியின் மூலம் பாசன வசதி பெறும் உரிமை பெற்ற உய்யக்கொண்டான், மேட்டுக்கட்டளை, புதுவாத்தலை, ராமவாத்தலை உட்பட 19 கிளை வாய்க்கால்களுக்கு, மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரியின் கிளை வாய்க்கால்களில் தடுப்புகள் பழுதடைந்த காரணத்தினால் தண்ணீர் முறையின்றி வெளியேறுகிறது. எனவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பே உடனடியாக ஷட்டர்களை சரிசெய்திட வேண்டும். கரைக் காவலர்களையும் போதுமான எண்ணிக்கையில் நியமித்திட வேண்டும்.

கரூர் மாவட்டப் பகுதிகளில் பாய் கோரை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இதனை விற்பனை செய்ய முடியாமல் சுமார் 25 கோடி ரூபாய் அளவிலான பாய் கோரை செய்ய முடியாமல் தேங்கி உள்ளது. தமிழக அரசு கோரை உற்பத்தியாளர்களுடனும், வியாபாரிகளுடனும் கலந்து ஆலோசித்து பாய் கோரை விற்பனை தடையின்றி நடைபெற வழிவகைச் செய்திட வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :