வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: புதன், 16 டிசம்பர் 2015 (07:47 IST)

தரக்குறைவாக திட்டிய சென்னை கலெக்டர்: தற்கொலைக்கு முயன்ற தாசில்தார்

சென்னை கலெக்டர் திட்டியதால் தண்டையார்பேட்டை தாசில்தார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

வடகிழக்கு பருவம்ழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.இதில் பலர் வீடுகள்,பொருட்களை இழந்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக ஆரசு நிவாரணத் தொகை அறிவித்தது.இதனையடுத்து சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்களும், ஊழியர்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதற்கான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இந்த பணிகள் ஒருங்கிணைப்பாளராக தண்டையார்பேட்டை தாசில்தார் சத்யபிரசாத் கவனித்துவருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ள நிவாரணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி, மற்ற மாவட்ட ஊழியர்கள் முன்னிலையில் தாசில்தார் சத்யபிரசாத்தை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பணி சம்பந்தமாக அவரை ‘டார்ச்சர்’ செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தாசில்தார், அங்கு இருந்த குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனே அங்கு இருந்தவர்கள் தாசில்தாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் தாசில்தாரை தரக்குறைவாக பேசிய கலெக்டரை கண்டித்தும், அவரை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் நேற்று காலை சென்னை தாசில்தார்கள் ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கலெக்டர் சுந்தரவள்ளி நேரில் வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தற்கொலைக்கு முயன்ற தாசில்தார் சத்யபிரசாத்திடம் மன்னிப்பு கோருவதாக அவர் கூறியதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.