வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2015 (00:47 IST)

கடலூரில் சாயப்பட்டறை தொழிற்சாலைகளுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

கடலூர் சிப்காட்டில் அமைய உள்ள சாயப்பட்டறை தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.
 

 
இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது 
 
ஏற்கெனவே மனித இனம் வாழத் தகுதியற்ற பிரதேசமாக கடலூர் சிப்காட் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் காற்றும் தண்ணீரும் நிலமும் நஞ்சாகிவிட்டது.
 
இந்த நிலையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட சாயப்பட்டறை ஆலைகள் கடலூர் சிப்காட் விரிவாக்கம் 3 ல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், திருப்பூர் சாயக் கழிவுகளை சாலை வழியாக கடலூர் பகுதியில் கடலில் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். 
 
கடலூர் சிப்காட் பகுதி 3ல் இந்த நாசகார சாய ஆலைகளுக்கு கடந்த கால திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்த நச்சு சாய ஆலைகள் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இப்போதும் விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த விவசாயம் அழிந்து போகும். கடலை மட்டுமே நம்பி மீன்பிடித் தொழில் நடைபெற்று வரும் மீன் தொழில் நாசம் அடையும்.
 
இந்த நிலையில், சைமா எனப்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்துக்கு கடலூர் சிப்காட் 3 ல் 99 ஆண்டுகால குத்தகைக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 10 சாயப்பட்டறை ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. 
 
சைமாவின் சாயப்பட்டறை ஆலைகளுக்காக 12 ஆழ்துளை கிணறுகளை 1150 அடி ஆழத்துக்கு அமைத்து நாள்தோறும் 10.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் சாயப்பட்டறைகளை சுற்றி உள்ள கிராமங்களின் ஒட்டுமொத்த நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு விடும். வெறும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ள இந்தப் பகுதி விளைநிலமெல்லாம் பாலைவனமாகிவிடும்.
 
மேலும், சாயப்பட்டறை கழிவுகளை கடலில் கலக்கும் படுபாதக செயலை  செய்ய  சைமா சாய ஆலைகள் குழாய்களைப் பதித்துள்ளன. இப்படி செய்தால், கடலை மட்டுமே மீன்பிடிக்கும் கடற்தொழிலாளர்கள் வாழ்வே நிர்மூலமாகிவிடும். 
 
இந்தப் பகுதியில் சைமா சாய ஆலைகள் அமைந்தால், கடலூர் சுற்றுவட்டார கிராம மக்கள் நிலமிழந்து, நீர்வளம், கடல் வளம், விவசாயம், வாழ்வாதாரம் இழந்து புற்றுநோய் மற்றும் பல்வேறுவித நோய்களுக்கு ஆளாகி செத்து மடிய நேரிடும்.
 
எனவே,  சைமா சாய ஆலைகள் தொடங்கும் பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி,  மாபெரும் முற்றுகைப் போராட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு கடலூர் சிப்காட் முன்பு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.