1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 19 மே 2014 (14:02 IST)

ஈழத்தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா அக்கறை, அதற்கு மக்கள் அளித்துள்ளனர் வெற்றி எனும் சர்க்கரை - டி.ராஜேந்தர்

ஈழத்தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா காட்டினார் அக்கறை. அதற்கு மக்கள் அளித்துள்ளனர் வெற்றி எனும் சர்க்கரை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அவர் கூறியதாவது:–
 
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக படுதோல்வி அடைந்துள்ளது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அதை இந்த கட்சிகள் தடுக்க தவறி விட்டன. கொலையுண்ட ஈழத்தமிழர்களின் ஆத்மாக்கள் காங்கிரசையும் திமுகவையும் தேர்தலில் தண்டித்து விட்டன.

காங்கிரஸ் கட்சியில் விலைவாசி உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையை ஏற்றினார்கள். வரிகள் விதித்தும் கஷ்டப்படுத்தினார்கள். அதனால் மக்கள் பலத்த சவுக்கடி கொடுத்துள்ளனர்.
 
மோடி அலை என்பது இறையருளால் பூத்த புதியரசவாதம் தனி பெரும்பான்மை வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மோடிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் என் வாழ்த்துக்கள். குமரியில் வென்ற பொன்.ராதாகிருஷ்ணன், தர்மபுரியில் வென்ற அன்புமணிக்கும் வாழ்த்துக்கள்.
 
அதிமுக பெற்று இருப்பது மாபெரும் வெற்றி. அது தன்னம்பிக்கையோடு போராடிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா காட்டினார் அக்கறை. அதற்கு மக்கள் அளித்துள்ளனர் வெற்றி எனும் சர்க்கரை.
 
திமுகவுக்கு ஏற்பட்ட பூஜ்ஜிய நிலையை எண்ணி வேதனைப்படுகிறேன். ஏற்கனவே தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்துகளை அக்கட்சி இழந்து விட்டது. அடுக்கடுக்கான தோல்விகளை திமுக சந்திக்கிறது. கருணாநிதி கட்சிக்குள்ளே செய்ய வேண்டும் சில மாற்றங்கள். இல்லையேல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் ஏமாற்றங்கள் என்று டி.ராஜேந்தர் கூறினார்.