1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (12:10 IST)

பன்றி காய்ச்சல் நோயாளிகளுக்கு மாத்திரைகளை இலவசமாக வழங்க வேண்டும்: சுகாதாரத்துறை அமைச்சர்

தனியார் மருத்துவமனைகள் பன்றி காய்ச்சல் மாத்திரைகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:-
 
நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதைப் போன்று சுகாதாரத் துறையினரும் மக்களைக் காப்பதில் விழிப்போடு பணியாற்ற வேண்டும்.
 
பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் தமிழகத்தில் நுழையாத வண்ணம் செயல்பட வேண்டும். பன்றி காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்புப் பணிகள், சிகிச்சைகள் ஆகியவற்றில் காணப்படும் முன்னேற்றத்தை நாள்தோறும் இ-மெயில், வாட்ஸ்-ஆப் மூலம் தெரிவிக்க வேண்டும்.
 
வட்டார, மண்டல அளவில் நோய்த்தொற்று குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துக் கொண்டு, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் இல்லை என்று கூறாமல் தாராளமாக வழங்க வேண்டும்.
 
பன்றி காய்ச்சல் சிகிச்சைக்காக தமிழக அரசிடம் 4 லட்சம் 'டாமி புளூ' மாத்திரைகள் இருப்பில் உள்ளன. எனவே, தனியார் மருத்துவமனைகளும் இந்த மாத்திரைகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.