செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 23 மார்ச் 2016 (10:12 IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவி–மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற குமாஸ்தா

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவி, மகனை ஆயியோரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற குமாஸ்தா, தானும் தற்கொலை செய்துகொண்டார்.


 

 
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஒரு அரசு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார்.
 
இவருடைய மனைவி நிர்மலாமேரி. இவர் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியைச் சேர்ந்த இவரை சுப்பிரமணி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
 
இந்த தம்பதியினரின் மகன் ரோகன் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். வழக்கு விஷயமாக நீதிமன்றத்திற்கு வரும் சில பெண்களுடன் சுப்பிரமணிக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகின்றது.
 
இதனால் நிர்மலாமேரி கணவருடன் தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இதேபோல, நிர்மலா மேரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சுப்பிரமணி அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
 
இது குறித்து நிர்மலாமேரி சென்னையில் உள்ள தனது அண்ணன் தாமசிடம் தெரிவித்துள்ளார். அவர் சமாதானம் செய்து வைத்துள்ளார். இதுபோல பலமுறை நடந்திருப்பதாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னர் குடிபோதையில் சுப்பிரமணி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ளார். இதை, தட்டிக்கேட்ட மகன் ரோகனையும் அடித்துள்ளார்.
 
இதை அறிந்த தாமஸ் ஆண்டிமடத்துக்கு வந்து, சுப்பிரமணியையும் நிர்மலாமேரியையும் சமாதானம் செய்தார். எஸ்எஸ்எல்சி தேர்வு முடிந்ததும் நிர்மலாமேரியையும், ரோகனையும் சென்னைக்கு அழைத்துச் செல்வதாகவும் அதுவரையில் அமைதியாக இருக்கும்படியும் கூறி சென்னைக்குத் திரும்பியுள்ளார்.
 
மீண்டும் தகராறு ஏற்பட்டதால், நிர்மலாமேரி மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறி தெரிந்த ஒருவரின் வீட்டில் தங்கினார். பின்னர் வீடு திரும்பினார்.
 
இந்நிலையில், இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த சுப்பிரமணி, மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டிலில் பெட்ரோலை பிடித்து வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி, பெட்ரோலை முதலில் தனது உடலிலும், பின்னர் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.
 
அவர்களின் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால், மூவரும் அலறினார்கள். ரோகன் எரியும் தீயுடன் வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார்.
 
இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் காவல்துறையிர் உயிருக்கு போராடிய நிர்மலாமேரி, ரோகன் ஆகியோரை மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். முன்னதாக சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்திருந்தார்.
 
இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நிர்மலாமேரியும், தஞ்சாவூர் மருத்துவமனையில் சிறுவன் ரோகனும் உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவத்தின்போது பெட்ரோல் சிதறி வீடும் தீப்பிடித்து எரிந்தது நாசமானது. இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.