செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2016 (23:56 IST)

கரும்புக்கான கொள்முதல் விலையை உடனே அறிவிக்க கருணாநிதி கோரிக்கை

கரும்புக்கான கொள்முதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அதிமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பில் இருந்தாலே, அவர்களின் அலட்சியத்தாலும், தாமதத்தாலும் அடுக்கடுக்காகப் பிரச்சினைகள் அணிவகுத்து வரும். அவற்றில் ஒன்று தான்,  கரும்பு விவசாயிகளின்  பிரச்சினை.
 
கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை  இந்த ஆட்சியினர் கண்ணெடுத்துப் பார்ப்பதுமில்லை, காது கொடுத்துக் கேட்பதுமில்லை;   கவலை கொள்வதுமில்லை.   நானும், மற்றக் கட்சியினரும் இதுபற்றிப்  பல்வேறு அறிக்கைகள் கொடுத்து இடித்துரைத்தும்  பயன் ஏற்பட்டதில்லை.
 
ஒரு டன் கரும்புக்கு  மத்திய, மாநில அரசுகள் 4000 ரூபாய் விலை நிர்ணயம் செய்து வழங்கச் செய்ய வேண்டும், 2015-2016ஆம் ஆண்டு பருவத்திற்கு கொள்முதல் விலையை  பொங்கலுக்கு முன்பே அறிவித்திட வேண்டும்,  சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய கரும்பு பண பாக்கி  1,500 கோடி ரூபாயை 15 சதம் வட்டியுடன் வழங்க வேண்டும்.   கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்பு விலையில் தனியார் ஆலைகள் 600 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.  
 
அந்த பரிந்துரை விலைப்  பாக்கியை வட்டியுடன் மாநில அரசுப் பெற்றுத் தர வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து  கரும்பு விவசாயிகள் தொடர்ந்து இந்த ஆட்சியிலே போராடி வருகிறார்கள். 
 
அகில இந்திய அளவில் 2014-2015ஆம் ஆண்டில் கரும்பு உற்பத்தி  245 இலட்சம் டன்னிலிருந்து  282 இலட்சம்  டன்னாக உயர்ந்துள்ளது.  ஆனால் இந்த அதிமுக ஆட்சியில்,  தமிழகத்தில்  கரும்பு உற்பத்தி  20 இலட்சம் டன்னிலிருந்து  16 இலட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. 
 
கரும்பு விவசாயிகளுக்கு  உரிய காலத்தில்  கட்டுபடியாகக் கூடிய  தொகை வழங்காததாலும்,  வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்குப் போதிய  இழப்பீடு  தராததாலும்  கரும்புச்  சாகுபடி இந்த அளவுக்குக் குறைந்துள்ளது.
 
அதிமுக  அரசின் அலட்சியப் போக்காலும், கரும்பு விவசாயிகளிடம்  அதிமுக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினாலும்,   கரும்பு உற்பத்தி வெகுவாகக்  குறைந்து விவசாயத்தை விட்டு வெளியேறச்  செய்து வருகிறது.
 
2015-2016ஆம் ஆண்டு கரும்புப் பருவத்திற்கு மாநில அரசின் பரிந்துரை விலையை, அதிமுக அரசு இப்போதாவது  முத்தரப்புக் கூட்டம் நடத்தி,  அறிவித்திட வேண்டும். தனியார் ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய  மொத்தப் பாக்கித் தொகையையும்  மேலும் காலம் தாமதிக்காமல் வழங்கிடச் செய்திடத் தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
மாறாக, ஜெயலலிதாவின் அதிமுக அரசு,  கரும்பு விவசாயிகளிடம் கடைப்பிடித்து வரும்  கசப்பான அணுகுமுறையையே மேலும் தொடம் பட்சத்தில், வரும் 2016ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சரியான பாடத்தை கரும்பு விவசாயிகளே கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.