பெரம்பூரில் விஜய் வாங்கிய ஆடம்பர பங்களா... பின்னணி என்ன?...
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவிருக்கிறது. வருகிற 27ம் தேதி முதல் கட்டமாக 110 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கவுள்ளார். அதேநேரம் இரண்டாம் கட்ட தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் இறங்கியிருக்கிறார்கள்..
ஒருபக்கம், தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. வருகிற 29ம் தேதி பெரம்பூரில் தனது பிரசாரத்தை துவங்கவுள்ளார் விஜய். தொடர்ந்து 20 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான், பெரம்பூர் தொகுதிக்குள் வரும் கொடுங்கையூர் அடுத்துள்ள கண்ணதாசன் நகரில் விஜய் ஒரு ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார். சொந்த தொகுதி என்பதால் அங்கு அடிக்கடி செல்லவேண்டியிருக்கும் என்பதாலும் தேர்தல் தொடர்பான பணிக்கும் அந்த வீட்டை விஜய் பயன்படுத்துவார் என தெரிகிறது. ஜோதிடர்கள் அறிவுரைப்படி இன்று காலை அங்கு கிரகபிரவேச பூஜை நடந்ததாக சொல்லப்படுகிறது.