1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 18 நவம்பர் 2015 (14:56 IST)

ஜெயலலிதா அறிவித்துள்ள ரூ.500 கோடி என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி தான் - ஜி.ராமகிருஷ்ணன்

முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ரூ.500 கோடி என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
கடலூர் மாவட்ட மழை வெள்ளச்சேதத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன், ”பெருவெள்ளத்தினால் கடுமையான பாதிப்பினை காட்டுப்பாளையம் மற்றும் விசூர் கிராமம் சந்தித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
காட்டுப்பாளையம் கிராமத்தில் 10 பேர் இறந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் சடலம் கிடைக்கவில்லை. ஓடை புறம்போக்கில் அரசு தொகுப்பு வீடு கட்டிக்கொடுத்துள்ளது. 130 பேரின் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடு இருந்ததற்கான அடிச்சுவடே இல்லை.
 
எந்த ஏரி உடைந்து, எங்கிருந்து தண்ணீர் வந்து இந்த பேரழிவு ஏற்பட்டது என்பதை அரசு கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். பருவமழை வருமெனத் தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை.
 
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாற்று இடத்தைத் தேர்வு செய்து அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். அவர்கள் தற்போது நிர்க்கதியாக இருப்பதால் அவர்களது வாழ்வாதாரத்தை புனரமைக்கும் நிவாரணப் பணிகளை மாநில அரசு செய்ய வேண்டும்.
 
பொதுவான பாதிப்பு என்பது வேறு, இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்பு என்பது வேறு. எனவே, பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்று கடலூரை அறிவித்து உயிரிழந்தவர்கள், வீடு இடிந்தவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
 
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ரூ.500 கோடி என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றது. மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசிடம் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்று அறிவித்து கூடுதல் நிதி கேட்க வேண்டும். மத்திய அரசு இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.