வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்காதா? பயணிகள் அதிருப்தி..!
சென்னை வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை திட்டமிட்டபடி நாளை அதாவது மார்ச் 10ஆம் தேதி தொடங்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாதையின் பணிகளை முடித்து, நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு நாளை சேவை தொடங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சமீபத்தில் நடத்திய ஆய்வின் போது, வழித்தடத்தில் பாதுகாப்பு அம்சம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
இந்த மாற்றங்களை செய்வதற்கு இன்னும் கூடுதல் காலம் தேவைப்படுவதால், ரயில் சேவை நாளை தொடங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆணையரின் இறுதி ஒப்புதல் கிடைத்த பிறகே புதிய தொடக்கத் தேதி அறிவிக்கப்படும்.
பரங்கிமலை வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டால், வேளச்சேரி பகுதி மக்கள் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களுடன் எளிதாக இணைப்பை பெற முடியும் என்பதால், இந்த தாமதம் பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் குறைபாடுகள் களையப்பட்டு சேவை தொடங்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva