புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 4 ஜூலை 2025 (14:33 IST)

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

Vijay vs Stalin

தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் பேசிய தவெக விஜய், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகையிடுவதாக பேசியுள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டாவது தீர்மானமாக திமுக - பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதை அறிவித்த விஜய், முதல் தீர்மானமாக பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

அப்போது பேசிய நடிகர் விஜய், “பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நான் அவர்களை சென்று சந்தித்து வந்ததற்கு அடுத்த நாள் தமிழக அரசு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மக்களுக்கு பாதிப்பில்லாமல் விமான நிலையம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்தது. 

 

ஒன்று விமான நிலையம் வரும் என்று சொல்லுங்கள் அல்லது வராது என்று சொல்லுங்கள். பரந்தூரில் 1005 குடும்பங்கள்தான் வசித்து வருகின்றன என்று அலட்சியமாக சொல்கிறீர்கள். அவர்களும் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள்தானே. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை ஸ்டாலின் சார். 

 

இப்போதாவது பரந்தூர் மக்களை நேரில் சென்று சந்தியுங்கள். அவர்கள் பிரச்சினை, கோரிக்கைகளை கேட்டு முடிவெடுங்கள். இல்லாவிட்டால் பரந்தூர் மக்களை அழைத்துக் கொண்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் நியாயம் கேட்க” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K