தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை: பாஜக எம்.பி உறுதி


Suresh| Last Updated: சனி, 26 மார்ச் 2016 (10:58 IST)
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 
பாஜக எம்.பி தருண் விஜயை புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் சென்னையில் சந்தித்து பேசினர்.
 
புலம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக வாழும் தங்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரவேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்பில் சலுகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.
 
இதையடுத்து தருண் விஜய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாக கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
அத்துடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. 
 
இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் வலுக்கட்டாயமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள்.
 
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய பின்னர் விருப்பத்தின்பேரிலேயே அனுப்பப்படுவார்கள்.
 
எந்தவித சிரமும் இன்றி அகதிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் எளிதாக்கப்படும். முகாம்களில் உள்ள அகதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படவேண்டும். அதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


 

 
திருமங்கலம் அகதிகள் முகாம் சம்பவம் போன்று இனிமேல் நடக்காமல் இருக்க அதிகாரிகளை எச்சரிக்கிறேன். முகாம்களில் வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
 
திருச்சி அகதிகள் முகாமில் உள்ள தயன்ராஜ் விவகாரத்தில், அவருடைய வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நல்ல உறவு இருந்து வருகிறது. 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். இவ்வாறு தருண் விஜய் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :