1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (01:02 IST)

இலங்கை போர்க்குற்றம்; ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறையிருந்தால்... : ராமதாஸ்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறையிருந்தால், 233 சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்து அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுனவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் பன்னாட்டுக்குழு நடத்திய விசாரணையின் அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அல்- உசைன் நேற்று தாக்கல் செய்திருக்கிறார். இலங்கையில் திட்டமிட்டே மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்பட்டன என்பதை விசாரணை அறிக்கை தெள்ளத் தெளிவாக நிரூபித்திருக்கிறது.
 
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டும் தான் விசாரணை நடத்தப்பட்டது என்ற போதிலும், இதில் தெரியவந்துள்ள தகவல்களை அடிப்படையாக வைத்தே இலங்கையில் இனப் படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியும். இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் குண்டு பாய்ந்த காயங்களுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைகள் மீது சிங்களப்படையினர் குறி வைத்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் நடத்தியது.
 
விசாரணை மற்றும் சோதனை என்ற பெயரிலும் தமிழ் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியது, போரின் முடிவில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களான நடேசன், புலித்தேவன் ஆகியோர் சிங்களப்படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது என அனைத்து போர்க்குற்றச்சாற்றுகளும் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொடுமைகள் அனைத்தும் தமிழர்களை அழிக்கும் நோக்குடன் நடத்தப்பட்டவை என்பதால், இனப்படுகொலை என்றும் அறிவிக்க முடியும்.
 
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டதும், இன அழிப்பு நடந்ததும் உண்மை தான் என்பது பல தருணங்களில் அம்பலமாகி வருகிறது. இலங்கை நிகழ்வுகள் குறித்து விசாரிக்க ஐ.நா. பொதுச்செயலாளர் பான்.கி.மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மேன் தலைமையிலான குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் கொத்து குண்டுகளை வீசி படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டப்ளின் நகரில் விசாரணை நடத்திய இந்திய நீதிபதி இராஜேந்திர சச்சாரை உள்ளடக்கிய மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்தது உண்மை தான் என்று தீர்ப்பளித்தது.
 
இதைத் தொடர்ந்து, 2013 ஆண்டு டிசம்பர் மாதம் 7 முதல் 10 ஆம் தேதி வரை ஜெர்மனியின் பிரெமன் நகரில் நடைபெற்ற இதே மக்கள் தீர்ப்பாய விசாரணையின் முடிவில் இலங்கையில் நடத்தப்பட்டது திட்டமிட்ட இனஅழிப்பு போர் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்காவதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையிலும் போர்க்குற்றம் நிரூபனமாகியிருக்கிறது.
 
இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மை, அதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும், இக்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை நீதிமன்றத்தில் விசாரித்தால் நீதி கிடைக்காது என்று கூறியுள்ள மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விசாரிப்பதற்காக கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அறிவித்திருப்பது தான் அதிர்ர்சியளிக்கிறது.
 
உள்நாட்டு விசாரணைக்கும், கலப்பு விசாரணைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. உள்நாட்டு விசாரணையில் முழுக்க முழுக்க இலங்கை நீதிபதிகளே இருப்பார்கள் என்றால், கலப்பு விசாரணையில் பாதியளவு இலங்கை நீதிபதிகள் இருப்பார்கள் என்பது தான் உண்மை. போர்க்குற்றச்சாற்று குறித்த நீதிமன்ற விசாரணையில் ஒரே ஒரு இலங்கை நீதிபதி இருந்தால் கூட, தமிழர்களைப் போலவே நீதியும் படுகொலை செய்யப்பட்டுவிடும்.
 

எனவே, மனித உரிமை ஆணையம் நடத்திய புலன் விசாரணையில் வெளிவந்துள்ள உண்மைகள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த அட்டூழியங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
 
ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையம் கலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. இன்னொரு புறம் உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இதில் எது நடந்தாலும்,‘அறுவை சிகிச்சை வெற்றி... ஆனால், நோயாளி மரணம் (The Operation Was a Success, but the Patient Died)’ என்ற நிலை தான் ஏற்படும். இதைத் தடுக்க இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இந்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
 
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற போதிலும், அது எந்த அளவு மனப்பூர்வமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கக்கோரி இலங்கை வடக்கு மாநில சட்டப்பேரவையில் கடந்த ஒன்றாம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதே போன்ற தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையிலும் நிறைவேற்றும்படி கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பாமக உறுப்பினர் கணேஷ்குமார் வலியுறுத்திய போது, அதுகுறித்து பேச ஜெயலலிதா அரசு அனுமதி மறுத்தது. அதே ஜெயலலிதா அரசு தான் இப்போது தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
 
இந்த விஷயத்தில், ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறையிருந்தால், 233 சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்து அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.