1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 9 ஜனவரி 2015 (15:11 IST)

தோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல, பிரதமர் மோடியும்தான் - சீமான்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான், தோல்வியடைந்தது ராஜபக்சே மட்டும் அல்ல, பிரதமர் நரேந்திர மோடியும்தான் என்று கூறியுள்ளார்.
 
அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:-
 
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலமாக இலங்கையின் நிரந்தர மகுடாதிபதியாக நீடித்துவிடலாம் என கனவு கண்ட ராஜபக்சேயை அந்நாட்டு மக்களே தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள்.
 
இனவெறி அரசியல், அராஜக நடவடிக்கைகள், குடும்பத் தலையீடு என நேர்மையற்ற அரசியலை மட்டுமே நிர்வாகத் தகுதியாகக் கொண்ட ராஜபக்சேயை வரலாறு காறி உமிழ்ந்திருக்கிறது.
 
அறுபது ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகச் சொல்லி இனவெறிக் கொடூரனாக எந்த அதிபர் மாளிகையில் இருந்து ராஜபக்சே கொக்கரித்துச் சிரித்தாரோ, அந்த அதிபர் மாளிகையில் இருந்து அவர் இப்போது அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்.
 
தன் தேசத்து மக்களுக்கு உண்மையாக இல்லாத எந்தத் தலைவனும் நீடித்த அரசியலில் நிலைக்க முடியாது என்பதற்கு ராஜபக்சேயின் வீழ்ச்சி சரியான முன்னுதாரணம். கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் சொந்த நாட்டு மக்களின் மீதே ராணுவத் தாக்குதல் நடத்திய கொடுங்கோலனுக்கு காலம் மிகச் சரியான தண்டனையைக் கொடுத்திருக்கிறது.
 
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றும், வதை முகாம்களின் அடைத்தும், மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியும் தன்னை ஓர் அரக்கனாகக் காட்டிக்கொண்ட ராஜபக்சேயுடன் பிரதமர் மோடி தொடங்கி சுப்ரமணிய சுவாமி வரையிலான பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் தொடர்ந்து நட்பு பாராட்டினார்கள்.
 
தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் விதமாக ராஜபக்சேயின் வெற்றிக்குப் பகிரங்க வாழ்த்து தெரிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. ஊடகங்களின் பேட்டிகளிலும் பிரதமர் மோடியின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொண்ட ராஜபக்சேதான் இப்போது படுதோல்வி அடைந்திருக்கிறார்.
 
இதை ராஜபக்சேயின் தோல்வியாக மட்டும் கருத முடியாது. ஒருமித்த தமிழர்களின் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு அவரைப் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தும், சிகப்பு கம்பளம் விரித்தும், அவருடைய வழிபாட்டுக்கு பாதுகாப்பு வழங்கியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் நட்பு பாராட்டிய இந்திய அரசும் தோற்றுப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை.
 
சுப்ரமணியன் சுவாமி மாதிரியான ஊதுகுழல்களை வைத்துக்கொண்டு...

ராஜபக்சேவுக்கு லாலி பாடிய பிரதமர் மோடியும் தனது அரசியல் அணுகுமுறையில் தோற்றுப் போயிருக்கிறார். ராஜபக்சேயை அடிக்கடி சந்தித்து அவருக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்த அய்யா சுப்ரமணியன்சுவாமி அவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது நாம் தமிழர் கட்சி.


 
இனவெறி அரசியலால் எதையும் சாதித்துவிடலாம் என நினைத்த ராஜபக்சேயின் வீழ்ச்சியை புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராஜபக்சேயின் தோல்வியை ரசிக்கவோ, புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் வெற்றியைப் பாராட்டவோ தமிழர்களாகிய நாங்கள் நினைக்கவில்லை.
 
தமிழர்களின் சுதந்திரத்துக்கான எவ்வித அணுகுமுறையும் புதிய அதிபரிடம் தெரியாவிட்டாலும், தமிழர்களை நசுக்கிய ஒரு கொடூரனின் வீழ்ச்சியை காலத்தின் தக்க பதிலடியாகவே தமிழுலகம் பார்க்கிறது. இனவெறி இல்லாத, ராணுவக் கொடூரங்கள் இல்லாத, பாகுபாடு பாராத நல்லாட்சியைத்தான் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
 
இதனைச் செயல்படுத்தும் அதிபராக மைத்ரிபால சிறிசேனா தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ராஜபக்சே அனுமதிக்காத பன்னாட்டு விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்வர வேண்டும். நில உரிமை தொடங்கி தனக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளும் எத்தகைய உரிமைகளும் அற்றுப்போனவர்களாக தமிழர்கள் இலங்கையில் தத்தளிக்கிறார்கள். அவர்களின் வாக்குகளும் ராஜபக்சேயை வீழ்த்த முக்கியக் காரணம்.
 
தமிழர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியதாகச் சொன்ன ராஜபக்சேயின் அத்தனை வார்த்தைகளும் பொய் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. தாங்கொணா வேதனைகளில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் மீட்சிக்கான செயல்பாடுகளில் புதிய அரசு உண்மையாகச் செயல்பட வேண்டும்.
 
இதுகாலம்வரை ராஜபக்சேயை தாங்கிப் பிடித்த உலக நாடுகள் இனியாவது அவரை இனவெறிக் கொடூரனாக அறிவிப்பதற்கான முன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும். அதற்கான பன்னாட்டு விசாரணைகளுக்கும் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வைக் கொடுக்கும் பொது வாக்கெடுப்புக்கும் புதிய அரசு வழி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.