வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2015 (10:56 IST)

21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறிருப்பதாவது:-
 
கடந்த 21 ஆம் தேதியன்று நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து இரண்டு படகுகளில் 15 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து இரண்டு எந்திரப் படகுகளில் 6 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர்.
 
அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்யப்பட்டு கங்கேசன் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மிகுந்த வருத்தத்துடன் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
 
இவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடிதான். அதற்காக சென்ற அப்பாவியான அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கை மிகுந்த பாதிப்புள்ளாகிவிடும்.
 
பாக். நீரிணை பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் உரிமைக்கு இலங்கை அரசு மீண்டும் மீண்டும் இடையூறு செய்து வருகிறது. இதை நான் உங்களிடம் தொடர்ந்து கூறி வருகிறேன். கச்சத்தீவை தவறான ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு மத்திய அரசு தாரைவார்த்ததன் விளைவுதான் இது.
 
கச்சத்தீவு வரலாற்றுப்பூர்வமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. கச்சத்தீவுக்கான 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்யவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனது தனிப்பட்ட வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துள்ளது.
 
தமிழக மீனவர்களை விடுவிக்கும்போது அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் தொடர்ந்து அங்கேயே பிடித்து வைக்கும் நிலையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இவை இல்லாமல் மீனவர்களால் வாழ முடியாது.
 
மீன்பிடிக்க முடியாமல் அவர்களை வறுமை நிலைக்கு தள்ளிவிடும். அந்த வகையில் ஏற்கனவே 28 படகுகள் அங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தமிழக மீன்வர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.
 
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 21 மீனவர்களையும், 30 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.