திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: திரண்டுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்!
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இந்த சிறப்பு நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது. அப்போது சுவாமி கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கோயிலை சுற்றியும் நிரம்பி வழிகின்றனர். கோயிலின் ராஜகோபுரமும், வளாகமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4,000 போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக நகரின் எல்லைகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கட்டணமில்லா சுற்றுப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனினும், கனமழை எச்சரிக்கை காரணமாக தனிநபர் வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சூரசம்ஹாரத்திற்காக தனியாக வாகன சிறப்பு அனுமதிச் சீட்டு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா, இலங்கை போன்ற வெளிநாட்டு பக்தர்களும் விரதம் மேற்கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
Edited by Mahendran