வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 16 டிசம்பர் 2015 (10:15 IST)

சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு - புகார் செய்த பெண் கைது

சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கில் புகார் செய்த சிறுமியின் அத்தை செல்வி, மற்றும் செல்வியின் மகன் அசோக் ஆகிய இருவரையும் சிபிசிஐடி காவல்துறை கைது செய்துள்ளனர்.
 

 
சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமியை பல ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து தந்தை, அண்ணன், மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரும் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
ஜூன் 5ஆம் தேதி சிறுமியின் தந்தை, சகோதரன் கைது செய்யப்பட்டனர். ஜூன் 17ஆம் தேதி சிறுமியின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். ஆனால், வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
இந்நிலையில், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த வழக்கறிஞர் வின்சென்ட் சிறுமியின் தொடர் பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த பொதுநல வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 3ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
 
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப் பின்னரே விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் அமிர்தம் வழக்குபதிவு செய்தார். 5(6)(எம்) மற்றும் 506 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலையம் அக்டோபர் மாதம் நடவடிக்கையை தொடங்கினர்.
 
இவ்வழக்கில் காவல்துறை உயர் அதிகாரி உள்ளிட்ட 26 பேர் உள்ளதாக சிறுமியின் வாக்குமூலத்தில் உள்ளது. இந்த வழக்கில் ஜனவரி 2016ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், சிறுமிக்காக புகார் செய்த சிறுமியின் அத்தை செல்வி, மற்றும் செல்வியின் மகன் அசோக் ஆகிய இருவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.