வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2015 (08:39 IST)

சிவாஜி சிலையை அகற்றுவதற்கு காலஅவகாசம் கோருவதை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிவாஜி சிலையை அகற்றுவதற்கு கால அவகாசம் கோரும் தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதின்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


 
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்றும், இது குறித்து 16 ஆம் தேதிக்குள் (நேற்று) அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.
 
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
அந்த மனுவில், "சிவாஜி மணிமண்டபம் கட்டி அதில் சிவாஜி சிலை வைக்கப்படும். மணிமண்டபம் கட்டுவதற்கு 2 ஆண்டுகள் தேவைப்படுவதால் அதுவரை சிவாஜி சிலையை அதே இடத்தில் தொடர்ந்து வைத்திருக்க அவகாசம் வழங்க வேண்டும்.
 
நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, 2 ஆண்டு அவகாசம் அதிகம், எனவே மணிமண்டபம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்த சரியான தகவல் பற்றி தமிழக அரசு விரிவான அறிக்கையை 16 ஆம் தேதி (நேற்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்றது.
 
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் மற்றும் தமிழக அரசு வழக்கறிஞர் பி.பாலாஜி ஆகியோர் வாதாடினர்.
 
நாகேஸ்வரராவ் தன்னுடைய வாதத்தில், சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டுவது குறித்த விரிவான திருத்தப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைபடத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் இந்த மாத இறுதிக்குள் கிடைத்துவிடும்.
 
உரிய நடைமுறைகளுக்கு பின்னர் 2016 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சிவாஜி மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும். அதன் பிறகு சிவாஜி சிலை மணிமண்டபத்திற்கு மாற்றப்படும். எனவே, அது வரை சிவாஜி சிலை தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து இருக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார்.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட அறிக்கையில் 2016 அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். 
 
உயர் நீதிமன்றத்திற்கு கட்டாயமாக தேவைப்பட்டால் ஒழிய நெடுஞ்சாலைத்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறினர்.