1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2015 (16:11 IST)

காதல் ஜோடியை ஆடி மாதத்தை காரணம் கூறி பிரித்த கொடுமை : மீட்டுத்தர வாலிபர் கோரிக்கை

ஆடி மாதத்தை காரணம் கூறி திருமணம் செய்த காதலர்களைப் பிரித்ததை அடுத்து, தனது மனைவியை மீட்டுத்த்ர கோரி வாலிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த கீழக்கருங்கடல் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மணிராஜ் (25). இவர் திங்களன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
 
அந்த மனுவில், ”நான் ஒரு ஓட்டல் தொழிலாளி, நானும் எனது உறவினரான எங்கள் ஊர் இளங்கோ மகள் மீனா சுசிலாவும் (22), கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். 22.07.2015அன்று மீனா சுசிலா. என்னைத் தேடி திருவனந்தபுரத்தில் நான் வேலை பார்த்த ஓட்டலுக்கே வந்துவிட்டார்.
 
வீட்டில் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும், அதனால் நான் வீட்டில் இருக்க முடியாது. எனவே என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என்னை வற்புறுத்தினார். அதனால் நானும் மீனாவும், கேரள மாநிலம் புனலூரில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.
 
இந்நிலையில் மீனா சுசிலாவின் தாயார் மல்லிகா, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீனாவை அவளது விருப்பத்திற்கு எதிராக கடத்தி சென்றுவிட்டதாக பொய்யான மனு ஒன்றை கொடுத்தார். இதன் பேரில் நானும், மீனாவும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 27.07.2015 அன்று விசாரணைக்கு ஆஜரானோம். போலீஸ் விசாரணையில் மீனா சுசிலா அவளது விருப்பத்தின் பேரிலேயே என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
 
மீனாவின் தாயார் மல்லிகா, தற்போது ஆடிமாதமாக இருப்பதால் முறைப்படி திருமணம் செய்ய முடியாது என்றும், ஆவணி மாதத்தில் இன்னும் 20 நாள் கழித்து ஊர் அறிய திருமணம் செய்து வைப்பதாக பேசி காவல்நிலையத்தில் எழுதி கொடுத்து, திருச்செந்தூர் ஜீவா நகரில் வசித்து வரும் மீனாவின் அத்தை லெட்சுமி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
 
இதற்கு மீனா மறுக்கவே காவல்துறை ஆய்வாளர் உங்கள் இருவரையும் இன்னும் 20 நாளில் சேர்த்து வைப்பது எனது பொறுப்பு என்று உறுதிமொழி அளித்தார். இதையடுத்து அத்தை வீட்டிற்கு சென்ற மீனா ஓரிரு நாட்கள் மட்டும் என்னுடன் பேசிவந்தார். அதன்பின் பேசவில்லை. இதனால் நான் என்னவென்று பார்ப்பதற்காக திருச்செந்தூர் சென்றேன்.
 
அங்கு மீனாவின் அத்தை லெட்சுமியும், அவரது கணவர் செந்திலும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி விரட்டி விட்டனர். தற்போது எனது மனைவிமீனாவை மும்பைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அங்கு அவளுக்கு ஒழுங்காக உணவு கொடுக்காமலும், யாருடன் பேசாமலும் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக தெரிகிறது.
 
அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுகுறித்து நான் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தேன். சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மீனாவை நீ எனது மனைவி என்று கூறக்கூடாது, வேறு வழி இருந்தால் ஏதும் பார்த்துக்கொள் என்று கூறி என்னை மிரட்டி அனுப்பினார்.
 
இதனால் சித்ரவதையால் பாதிக்கப்பட்டு வரும் எனது மனைவி மீனா சுசிலாவை மீட்டுத்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.