முதல் மனைவியின் 3 குழந்தைகளது கழுத்தை அறுத்து நாடகமாடிய இரண்டாவது மனைவி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 11 மார்ச் 2016 (15:13 IST)
தனது கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து நாடகமாடிய இரண்டாவது மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
 
திருப்பூர் வீரபாண்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (38). இவரது முதல் மனைவி முத்துலட்சுமி. 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் முத்துலட்சுமி இறந்து விட்டார். இவர்களுக்கு நதியா (7), ஸ்ரீஷா (5) என்ற மகள்களும், ஜெயராஜ் (4) என்ற மகனும் உள்ளனர்.
 
தனது மூன்று குழந்தைகளை பராமரிக்க வேண்டி சுப்பிரமணி, தனது உறவு பெண்ணான அபிராமி என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், அபிராமி முதல் மனைவியின் குழந்தைகள் மீது அன்பு காட்டாமல் வெறுப்பில் இருந்துள்ளார். மேலும், அந்த குழந்தைகளை விடுதியில் சேர்க்கவும் வற்புறுத்தியுள்ளார்.
 
இதனால், இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வெளியே சென்றிருந்த சுப்பிரமணி வீட்டிற்கு வந்தபொழுது அபிராமி மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் மூன்று குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.
 
மயங்கிக்கிடந்த அபிராமியை, சுப்பிரமணி தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளார். மயக்கம் தெளிந்த அபிராமி கடைவீதிக்கு சென்று வந்தபோது ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்து தன்னை தாக்கியதாகவும், குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டதாகவும் கூறினார்.
 
ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அபிராமியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, அபிராமி முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
 
சந்தேகமடைந்த காவல் துறையினர் சிகிச்சை பெற்றுவரும் குழந்தை நதியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது சித்தி அபிராமி தன்னையும், தங்கை மற்றும் தம்பியை வலுக்கட்டாயமாக பிளேடால் கழுத்தை அறுத்ததாக கூறியுள்ளார்.
 
கணவன் - மனைவி பிரச்சனையில் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து விட்டு அபிராமி நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :