வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 2 பிப்ரவரி 2015 (12:30 IST)

பள்ளி மாணவனுக்கு மதுவை விற்பனை செய்த டாஸ்மாக் அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க பாமக கோரிக்கை

பள்ளி மாணவன் என்றே தெரிந்து அவனுக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்துள்ளது.
 
கரூரில் பள்ளி மாணவன் என்று தெரிந்து அவனுக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக மாநில செயலாளர் பாஸ்கரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இது குறித்து பாமக மாநிலச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கூறியிருப்பதாவது:- 
 
தமிழகத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதற்கு தமிழக அரசின் புள்ளி விவரமே சாட்சியாக உள்ளது. இதன் காரணமாக ஒருபுறம் அரசுக்கு வருமானம் வந்தாலும், சமுகத்தில் மது குடுப்பவர் உடலும், அவர்களது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்படுவது நிஜத்திலும் நிஜம்.
 
இந்நிலையில்தான், மது என்ற அரக்கன் மனிதர்களைத் தாண்டி பள்ளி மாணவர்களையும் குறிவைத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு உதாரணமாக, கருர் அருகில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில், 17 வயதே நிரம்பிய ஒரு பள்ளி மாணவன் பிளஸ் 2 வகுப்பு பயின்று வருவதாகவும், அவரும், இதே பள்ளியில் பயிலும் சில மாணவர்களும் சென்று அரசு மதுக்கடையில் மது வாங்கி அருந்தியுள்ளனர்.
 
போதையின் உச்சத்திற்க்குச் சென்றதால், அவர்கள் தாங்கள் எங்கே உள்ளோம் என்றுகூட தெரியாமல், கரூர் பேருந்து நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து கிடந்துள்ளனர். பட்டப்பகலில், பள்ளி சீருடையிலேயே, பள்ளி மாணவர்கள், மது அருந்தி பாதை மாறி சென்றுள்ளனர்.
 
இந்தத் தகவல் தெரிந்து அவர்களது பெற்றோர்கள் பதறித்துடித்து வந்து மீட்டுச் சென்றுள்ளனர். மேலும் அதில் ஒரு மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் டி.சியை கொடுத்து விரட்டியடித்துள்ளது. 
 
காலையில் பள்ளிக்கு வந்த பிறகுதான், மாணவர்கள் மது குடிக்கும் திட்டத்தை வகுத்து இருப்பார்கள். அப்போது அவர்கள் அரசு கடையான டாஸ்மாக் கடையில்தான் மது வாங்கி இருக்க வேண்டும். 18 வயது நிரம்பாதவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு ஏன் தெரியாமல் போனது.
 
மேலும், பள்ளி மாணவன் மது குடித்தது தவறு என்றால், அதை விற்பனை செய்த அரசின் செயலும் தவறுதானே. முன்பெல்லாம் தமிழகத்தில் சாரயக்கடைகளை காவல்துறையினர் தேடிச் சென்று அழிப்பார்கள். ஆனால் இன்று மதுக் கடைகள் வேண்டாம் என பொது மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு போடுகின்றார்கள். 
 
மதுவுக்கு சராசரி மனிதர்கள் மட்டும் அல்லாது மாணவர்களும் அடிமையாகியுள்ளனர் என்பது இதன் மூலம் உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, மது குடித்த மாணவனை அழைத்து அவனுக்கு அதன் தீமைகளை எடு்துக்கூறி, கவுன்சிலிங் வைத்து மாற்றுப் பள்ளியில் சேர்க்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
 
மேலும், இந்த தவறுக்கு மாணவன்தான் முழு பொறுப்புஎன அவனை மட்டும் பலிகாடா ஆக்காமல், இந்த மாணவனுக்கு மதுவை விற்பனை செய்த கடை ஊழியர்கள், அதை கண்காணிக்க தவறிய சூப்பர்வைஸ்சர் மற்றும் டாஸ்மாக் மேலாளர் போன்ற அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ இவ்வாறு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.