பள்ளி மாணவியை விபச்சாரத்தில் தள்ளி கொடுமை; காவலர் உட்பட 12 பேர் கைது


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 11 ஜனவரி 2016 (11:41 IST)
மதுரையில் பள்ளி மாணவியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆயுதப்படைக்காவலர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.
 
 
மதுரை திடீர்நகர் காவல் துறையினருக்கு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள விடுதியில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சோதனை நடத்தி அந்த 16 வயது மாணவியை காவல்துறையினர் மீட்டனர்.
 
அப்போது நடத்திய விசாரணையில், அந்த மாணவி அவரது பெற்றோருக்கு 9-ஆவது குழந்தை என்பதும் அதனால், வறுமையில் இருந்ததால், அதைப் பயன்படுத்தி, விபசார பெண் புரோக்கர்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்தது.
 
அந்த பெண் புரோக்கர்கள் மாணவியை மிரட்டி, திருப்பரங்குன்றத்தில் உள்ள விடுதி நடத்தி வரும் சகோதரர்களிடம் அனுப்பியுள்ளனர். விடுதியில், மாணவியை விபச்சாரத்தில் தள்ளி, விடுதிக்கு வரும் வாடிக்கையாளர் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
 
பின்னர் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள விடுதிக்கு மாணவி அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு, விடுதி மேலாளர் ஒருவர் உதவியுடன் வாடிக்கையாளர்கள் மூன்று பேர் மாணவியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
 
மாணவி அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட 12 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் ஆயுதப்படைக் காவலர் என்பதும், ஒருவர் அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :