வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 மார்ச் 2016 (11:20 IST)

தற்கொலைக்கு முயன்ற 10 ஆம் வகுப்பு மாணவி: பள்ளி நிர்வாகி மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி சொக்கன் குடியிருப்பில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக பள்ளி நிர்வாகி மற்றும் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது.
 
இந்த பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
இது குறித்து அந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் புகார் எழுதி தருமாறு பள்ளி தாளாளரும், பாதிரியாருமான சகாயராஜ் ராயன் மற்றும் ஆசிரியை யூசில் ஆகியோர் கேட்டுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, அந்த மாணவியை பள்ளிக்கு வர வேண்டாம் என்று ஆசிரியை யூசில் கூறியதாக கூறப்படுகின்றது.
 
இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் மண்எண்ணெயை குடித்தும், உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
 
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், அந்த மாணவியை 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் சாத்தான்குளம் தாசில்தாரிடம் முறையிட்டனர்.
 
இது குறித்து தட்டார் மடம் காவல்துறையினர் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து, மாணவி தற்கொலைக்கு தூண்டிய புகார் தொடர்பாக பள்ளி தாளாளர் சகாயராஜ் ராயன், ஆசிரியை யூசில் ஆகியோர் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.