வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 17 ஜூலை 2014 (19:35 IST)

தாயின் கள்ளக்காதலனால் கற்பழித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவி: கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

சிதம்பரம் அருகே நடந்த பள்ளி மாணவி கொலையில் தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். காவல்துறையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
சிதம்பரம் அருகே எம்.ஜி.ஆர். திட்டில் உள்ள ஓடையில் கடந்த 10 ஆம் தேதி அன்று இளம்பெண் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் அருகில் ஒரு பை கிடந்தது. அதில் அரசுபள்ளிக்கூட யூனிபார்ம், ஒரு ஜோடி காலணி மற்றும் சில பொருட்களும் இருந்தது.
 
இதனையடுத்து கிள்ளை காவல்துறையினர் அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பள்ளிக்கூட யூனிபார்ம் வைத்திருந்ததால் அந்த பெண், அரசு பள்ளிக்கூட மாணவி என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரை பற்றிய முழுவிவரம் தெரியவில்லை.
 
மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவியை எம்.ஜி.ஆர் திட்டு பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
 
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. மஞ்சுநாத், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. முருகன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதிகா ஆகியோர் 2 நாட்கள் சிதம்பரத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட மாணவியை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக கடலூர், நாகை மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
 
கைப்பற்றப்பட்ட மாணவியின் உடையில் சீர்காழியில் தைக்கப்பட்ட டெய்லரின் பெயர் இருந்தது. இதனால் அந்த மாணவி சீர்காழி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளில் நீண்ட நாட்கள் விடுமுறையில் இருப்பவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.
 
இதில் காரைமேடு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வந்த கவுசல்யா (வயது 16)1 ஆம் தேதியில் இருந்து நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய அடுத்த கட்ட விசாரணையில் அந்த பெண் தான்எம்.ஜி.ஆர். திட்டு ஓடையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.
 
மேலும் அந்த பெண் சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி திருகார்த்திகேயன்-பழனியம்மாள் மகள் கவுசல்யா (வயது 16) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதை தொடர்ந்து மாணவியை கொலை செய்தவர் யார்? என்ற விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர். அப்போது கவுசல்யாவின் தாய் பழனியம்மாளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பழனியம்மாளின் கள்ளக்காதலன் எம்.ஜி.ஆர் திட்டு பகுதியை சேர்ந்த அன்புதாஸ் என்ற ஜான் தான் கடைசியாக கவுசல்யாவை அழைத்து சென்ற விவரம் தெரியவந்தது.
 
இதனால் அவர் தான் கவுசல்யாவை கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருக்கலாம் என்று காவல்துறையினர் முடிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று அன்புதாசை சிதம்பரம் அருகே உள்ள பொன்னந்திட்டு பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
 
எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் வசித்து வந்த எனக்கு திருமணமாகி வேல்விழி என்கிற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மீன்பிடித்தும், கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வந்தேன். நாகை மாவட்டத்துக்கு கட்டிட வேலைக்கு சென்றபோது, பழனியம்மாளுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
 
அப்போது பழனியம்மாளுடைய மூத்த மகள் கவுசல்யாவின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனையடுத்து அவளிடம் ஆசை வார்த்தை கூறி எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். நான் திருமணமானவன் என்ற தகவலை அவளிடம் மறைத்திருந்தேன்.
 
இந்தநிலையில் கடந்த 1 ஆம் தேதி நானும், கவுசல்யாவும் திருமணம் செய்து கொள்வதற்காக சீர்காழியில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு வந்தோம். அங்கு ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து 5 நாட்கள் தங்கியிருந்தோம். அப்போது எனக்கு வந்த போனை கவுசல்யா எடுத்து பேசினாள். இதில் மறுமுனையில் எனது முதல் மனைவி பேசினார். இதனால் எனக்கு ஏற்கனவே திருமணமானது கவுசல்யாவுக்கு தெரியவந்தது. இதனால் அவள் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.
 
இதையடுத்து கவுசல்யாவை சமாதானப்படுத்தி எனது ஊருக்கு அழைத்து வந்தேன். வரும் வழியில் முதல் மனைவி மற்றும் 3 குழந்தைகளை விட்டு விட்டு, என்னுடன் தான் வாழ வேண்டும் என்று கவுசல்யா வற்புறுத்தினார்.
 
இதனால் எனக்கும், கவுசல்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கட்டையால் அவளுடைய தலையில் அடித்து கொலை செய்தேன். பின்னர் கவுசல்யாவின் உடலை ஓடை பகுதிக்கு இழுத்து சென்று போட்டேன். இதில் கவுசல்யா அணிந்திருந்த உடை கிழிந்து விட்டது. பின்னர் அவள் பையில் வைத்திருந்த உடைகளை எடுத்து வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றேன். ஆனால் காவல்துறையினர் என்னை பொறி வைத்து பிடித்து விட்டனர் என்று அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
 
இதையடுத்து அன்புதாசை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 
காவல் கண்காணிப்பாளர் பேட்டி
 
இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதிகா கூறுகையில், கொலை செய்யப்பட்ட மாணவி கவுசல்யாவின் தாய் பழனியம்மாள் கொடுத்த தகவலின் பேரில் அன்புதாசை கைது செய்தோம். பழனியம்மாளுக்கும், அன்புதாசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த வழக்கில் கடலூர், நாகை மாவட்ட போலீசார் சிறப்பாக பணியாற்றினர். விசாரணைக்கு இரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.