மாணவன் கேலி செய்ததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 10 டிசம்பர் 2014 (17:20 IST)

சக மாணவன் கேலி செய்ததால், பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள மங்கம்மாள்பட்டியை சேர்ந்தவர் சங்கரேஸ்வரி (15). இவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சங்கரேஸ்வரி படிக்கும் அதே வகுப்பில் கார்த்திக் (15) என்பவரும் படித்து வருகிறார்.

கார்த்திக் அடிக்கடி மாணவி சங்கரேஸ்வரியை கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பலமுறை எச்சரித்தும் கார்த்திக் கேலி செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த சங்கரேஸ்வரியிடம் கார்த்திக் தகராறு செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சங்கரேஸ்வரி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார். ஆனால் அவரும் மாணவன் கார்த்திக்கை கண்டிக்காமல் ஆதரவாக பேசியுள்ளார். ஆசிரியையும், மாணவனும் ஆபாசமாக பேசியதால் மனமுடைந்த சங்கரேஸ்வரி பள்ளி அருகே இருந்த அரளி விதையை அரைத்து குடித்து பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே சக மாணவ, மாணவிகள் கொடுத்த தகவலின் பேரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சங்கரேஸ்வரியை ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சங்கரேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி காவல்துறை ஆய்வாளர் பாதமுத்து வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் ஆபாசமாக பேசிய கார்த்திக்கை கைது செய்தார். ஆசிரியை அப்சரா பானுவிடம் விசாரணை நடந்து வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :