1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (12:00 IST)

ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் - செ.கு.தமிழரசன்

ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது இந்க் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.  

இது குறித்து செ.கு.தமிழரசன் கூறியதாவது:-

“ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்கள், உரிமைகள் தொடர்பாக விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா.

தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளில் ஆதிதிராவிட மாணவர்கள் சேருவதற்கு 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானதாகும். ஆனால் மத்திய அரசினுடைய அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் தமிழக அரசின் நடைமுறையை ஏற்றுக்கொள்வதில்லை.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெயலலிதா சந்தித்தபோது, ஆதிதிராவிட மாணவர்கள் பி.இ. படிப்பில் சேர 35 சதவீத மதிப்பெண் எடுத்தாலே போதும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆதி திராவிட மக்கள் 20.1 சதவீதமும் பழங்குடியின மக்கள் ஒரு சதவீதமும் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது ஆதி திராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். பழங்குடியினருக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.“ என்று இவர் தெரிவித்தார்.