1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (10:33 IST)

சேலம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 144 தடை உத்தரவு

சேலம் மாவட்டம் திருமலை கிரி பகுதியில், கோவில் திருவிழா நிகழ்ச்சியை  முன்னிட்டு நடந்த ஏற்பட்டின்போது இரு தரப்பினரிடையே நடந்த மோதல் காரணமாக அப்பகுதிக்கு இம்மாதம் 9 ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
சேலம் அருகே உள்ளது திருமலை கிரி. இங்குள்ள தோப்புக்காடு பகுதியில் ஸ்ரீசைலாம்பிகை சமேத சைலகிரீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரத ராஜபெருமாள் கோவில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நாளை அதிகாலை 4.30 மணிக்கு மேல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த விழாவில் திருமலை கிரி, சிவதாபுரம், தளவாய்பட்டி, கொல்லப்பட்டி, சித்தனூர், நாய்க்கன்பட்டி உட்பட 21 கிராம மக்கள் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
 
இந்நிலையில் பொது மக்களில் ஒரு தரப்பினரிடம் இந்த கோவில் கட்ட பணம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. ஆனால் எங்களிடம் பணம் வசூலிக்கவில்லை என்று ஒரு தரப்பினரும் எங்களையும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
 
இதனால் இரண்டு தரப்பினரையும் அழைத்து உயர்அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று காலை கோவில் பகுதியில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை அறிந்த மற்றொரு தரப்பினர் திடீரென சித்தர் கோவில் மெயின் ரோட்டிற்கு வந்து ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் செய்தனர். 
 
கோவில் பிரச்சினை தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்றும் பால் குட ஊர்வலமும் நடத்துவது தவறு என்றும் அவர்கள் கூறினர்.
 
இந்த மறியலை காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனால் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
 
இதன் பின்னர் பொது மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கச் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். பிறகு இரண்டு தரப்பினரையும் சேலம் கோட்டாச்சியர் சேக் மொய்தீன் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
 
மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையால் இரு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை. பின்னர் அதிகாரிகள் இரு தரப்பினரும் கலைந்து செல்லுமாறும், கோவில் பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
 
இதைத் தொடர்ந்து, சேலம் கோட்டாச்சியர் சேக் மொய்தீன் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.
 
அதன்படி நேற்று (2–3–2015) இரவு 10 மணி முதல் வருகிற 9 ஆம் தேதி வரை 21 கிராமங்களிலும் இந்த 144 தடை உத்தரவு இருக்கும். இந்த உத்தரவையடுத்து நாளை நடக்க இருந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிகாரிகள் கோவிலுக்கு பூட்டு போட்டனர். மேலும், அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமலிருக்க திருமலைகிரி தோப்புக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.