சகாயம் விசாரணை குழுவை செயல்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும: கருணாநிதி வலியுறுத்தல்

Suresh| Last Modified புதன், 29 அக்டோபர் 2014 (09:02 IST)
சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரணை குழுவை செயல்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிரானைட் எடுப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதுபற்றி அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மதுரை மாவட்டத்தில் ஆட்சி தலைவராக பணியாற்றியவருமான சகாயம் தலைமையில் குழு ஒன்று அமைத்து விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் 11-9-2014 அன்று சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை குழுவினை அமைத்ததோடு, உடனடியாக அந்த குழு விசாரணையை முடித்து அறிக்கை தர வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, அதற்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் “அப்பீல்” செய்தது.

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மேல் முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் 18-9-2014 அன்று தள்ளுபடி செய்தது. ஆனால் அதையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு, அதிகாரி சகாயத்தை இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க அனுமதிக்கவில்லை.
மாறாக சகாயம் நியமனம் தொடர்பாக மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட “பெஞ்ச்” இன்று தமிழக அரசை கடுமையாக கண்டித்துள்ளது.

“சகாயம் விசாரிப்பதால் நீங்கள் ஏன் அச்சப்படுகிறீர்கள்? எங்களின் உத்தரவை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இவ்வளவு நாள் ஏன் காலதாமதம் செய்தீர்கள்?” என்றெல்லாம் அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, மேலும் தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
மேலும் அதிகாரி சகாயத்தை தற்போதுள்ள பொறுப்பில் இருந்து விடுவித்து, 4 நாட்களில் அவர் தலைமையிலே குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்க வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு நிதி உதவி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் இப்படிப்பட்ட செயல்பாடுகளால் நீதிமன்றம் எந்த அளவுக்கு வேதனைப்பட்டு தீர்ப்பளித்துள்ளது என்பதை எண்ணிப்பார்த்து, உடனடியாக சகாயம் ஐ.ஏ.எஸ்.
விசாரணை குழுவினை செயல்படுவதற்கான ஆணைகளைப் பிறப்பிப்பதோடு, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கை விட்டு மனித நேயத்தோடு நடந்து கொள்ளவேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :