வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (07:28 IST)

ஊரக பகுதியில் 4 ஆயிரம் கி.மீ. சாலைகள் ரூ.800 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் ரூ.800 கோடி செலவில் ஊரக பகுதியில் 4 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
இது குறித்து ஜெயலலிதா சட்டசபையில் 110 ஆவது விதியின் கீழ் வாசித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–
 
"ஊர் செழித்தால் நாடு செழிக்கும்" என்பதற்கேற்ப, ஊராட்சிகளில் வாழும் மக்கள் நலன் கருதி நகரங்களில் கிடைக்கப்பெறும் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கிராமங்களிலும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது.
 
ஊரக சாலைகளை மேம்படுத்துதல், வீட்டு வசதியினை அளித்தல், தூய்மையான சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தைப் பேணுதல், ஊரக மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துதல், போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
 
அந்த வகையில், நடப்பாண்டில், ஊரகப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பின் வரும் திட்டங்களை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஊரகச் சாலைகள் சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் வறுமையை ஒழிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

இதனை கருத்திற் கொண்டு, தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் 2015–16 ஆம் ஆண்டு 4,000 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்பாட்டிற்கு, 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக, ஊரகச் சாலைகள் மேம்பாட்டிற்காக நபார்டு திட்டத்தின் கீழ் 41 பாலங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் ஊரகச்சாலைகள் பராமரிப்பிற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஊரகப் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் சாலைகள், பாலங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், கிராம ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் போன்ற பல்வேறு பணிகள் 375 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், மாநில உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள், பாலங்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆகமொத்தம், சாலைகள், பாலங்கள் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக, ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 800 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, நடப்பாண்டில் மொத்தம் 1475 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தங்கள் கிராமங்களிலேயே பல்வேறு அரசு சேவைகளான பிறப்பு/ இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதியம் மற்றும் பல்வேறு வகையான சமூக பாதுகாப்பு உதவிகள் ஆகியவற்றை விரைந்து பெறும் வகையில், மின்னணு சேவையை அறிமுகப்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
 
இதற்கென 2015–16ஆம் நிதி ஆண்டில் 3890 கிராம ஊராட்சிகளில் சேவை மையங்கள் 661 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஊரகப் பகுதிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள தெரு விளக்குகளின் மின் கட்டண செலவு மற்றும் பராமரிப்பு செலவினம் அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், பசுமைத் தொழில் நுட்பத்தினை ஊக்குவித்திடும் பொருட்டும் நடப்பாண்டில் ஊரகப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக 300 கோடி ரூபாய் செலவில் மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், குக்கிராமங்களை வளர்ச்சி அலகாகக் கொண்டு ஒவ்வொரு குக்கிராமத்திலும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கோடு, தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்னும் "தாய்" திட்டத்தினை எனது தலைமையிலான அரசு 2011–12 முதல் செயல்படுத்தி வருகிறது.
 
"தாய்" மற்றும் இதர திட்டங்களின் கீழ் கிராமங்களில் உள்ள தெருக்கள் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு அமைக்கப்படும் தெருக்கள், எழிலாக இருப்பதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டவும் பயன்படும்.
 
2015–16 ஆம் ஆண்டில் 400 கி.மீ. நீளமுள்ள கிராமப்புற தெருக்கள் 120 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்ட தெருக்களாக மாற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.