இட ஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்ய ஆர்.எஸ்.எஸ். ஆயத்தமாகி விட்டது - ராமதாஸ் கண்டனம்

லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (20:38 IST)
இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆயத்தமாகி விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த இயக்கத்தின் 'ஆர்கனைசர்' இதழுக்கு அளித்த நேர்காணலில் இந்தியாவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் ஆபத்தானது; முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது ஆகும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளிப்படையான திட்டங்கள் என்றால், இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது மறைமுகமான திட்டம் ஆகும்.
இதை கடந்த காலங்களில் மற்றவர்களின் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போது நேரடியாகவே இக்கருத்தை முன்வைத்திருக்கிறது. ‘‘இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதற்காக ஒட்டு மொத்த நாட்டு நலனில் அக்கறை கொண்ட, சமூக, சமத்துவத்தில் உறுதிப்பாடு கொண்ட சிலரை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும்.

எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தேவை, எவ்வளவு காலம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அக்குழு தீர்மானிக்க வேண்டும். இதை செயல்படுத்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட, அரசியல் கலப்பில்லாத ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆயத்தமாகி விட்டது என்பதையே மோகன் பாகவத்தின் இந்த நேர்காணல் உணர்த்துகிறது.

இந்தியாவில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது என்று மத்திய அமைச்சர்களும், பாரதிய ஜனதா தலைவர்களும் கூறியிருக்கும் போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமை என்ன? பாரதிய ஜனதாக் கட்சியின் வலிமை என்ன? யார் சொல்வதை யார் கேட்பார்கள்? என்ற வினாக்களுக்கு விடை அறிந்தவர்களால் நடக்கப்போவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, முதலில் குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் மூலமாக, ‘‘கொடுத்தால் அனைவருக்கும் இட ஒதுக்கீடு தரவேண்டும்; இல்லாவிட்டால் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்த வைத்தது.

அடுத்து ஆர்.எஸ்.எஸ். தலைவரே களமிறங்கியுள்ளார். இவை அனைத்துமே ஆழம் பார்க்கும் செயல்கள். முதலில் இத்தகைய கருத்துகளைப் பரப்பி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்பது, பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாவிட்டால் திட்டத்தை அப்படியே செயல்படுத்துவது தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் உத்தியாகும்.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய துணையாக இருப்பது இட ஒதுக்கீடு தான். இது எந்தெந்த பிரிவினருக்கு தேவை என்பது அவர்களின் சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதை எந்த வகையிலும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை.
அதேபோல், ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு தொடர வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்ட துரோகங்கள், அநீதிகள் ஆகியவற்றின் காரணமாகத்தான் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அநீதியை ஒரு சில பத்தாண்டுகள் மட்டும் இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் சரி செய்து விடலாம் என்று நினைப்பது அறியாமையாகவே இருக்கும்.
இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தில் உள்ள கடைசி குடிமகன் அதிகாரம் பெறும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இந்த உண்மைகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறியாதது அல்ல. ஆனால், பாகவத்தின் நோக்கம் வேறு என்பதால் தான் இப்படியெல்லாம் அவர் பேசி வருகிறார்.

இன்றைய நிலையில் சமூகத்தின் தேவை முழுமையான சமூக நீதி தான். இதற்காக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் வாழும் பல்வேறு சமுதாய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆகும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் முன்வைக்கும் திட்டத்தை கைவிட்டு, வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். அதற்காக நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணிகளை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :