வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2016 (21:55 IST)

தமிழகத்தில் ரூ.11.60 கோடி பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி

தமிழ்நாட்டில் ரு.11.60 கோடியை பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுவினர் கைப்பற்றினர் என்றும் காவல் துறையினரால் ரூ.33.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தேர்தல் விதிமுறைகளை மீறி, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கம், சில்வர் குடங்கள், அரிசி மூட்டைகள், கேஸ் ஸ்டவ் போன்றவையும் உரிய அனுமதி ஏதும் இல்லாமல் லாரியில் ஏற்றிச் சென்ற ஏரி மண், கேரம்போர்டு, கிரிக்கெட் பேட் போன்ற விளையாட்டுப் பொருட்களும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
 
சென்னை, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், கோயமுத்தூர், மதுரை, நெல்லை, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 19.03.16 அன்று மொத்தம் 48 லட்சத்து 25 ஆயிரத்து 730 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 20.03.16 வரை பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட தொகை 5 கோடியே 17 லட்சத்து 21ஆயிரத்து 557 ரூபாய் ஆகும்.
 
நிலையான கண்காணிப்புக் குழுவினர் (எஸ்எஸ்டி) ஆய்வின்போது 19.03.16 அன்று 28 லட்சத்து 24ஆயிரத்து 500 ரூபாயும், 20.03.16 அன்று 8 லட்சத்து 68ஆயிரத்து 600 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. 20.03.16 வரை மொத்தம் ரூ.6கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 653 ரூபாயும் கைப்பற்றப்பட்டு சார்-கருவூலங்களில் செலுத்தப்பட்டுள்ளன.
 
உரிய விசாரணைக்குப்பின் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இக்குழுவின் சோதனையின் போது, அனுமதியின்றி எடுத்துச்சென்ற சிகரெட் பண்டல், வேட்டி, சேலை, பித்தளை குடங்கள், அலுமினியம் பார்கள், மதுவகைகள் போன்றவை சிக்கியது. இதுவரை 11 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
தேர்தல் நன்னடத்தை விதி அமலானதில் இருந்து 20.3.16 வரை பறக்கும் படையினரால் 5 கோடியே 17 லட்சத்து 21ஆயிரத்து 557 ரூபாயும், நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.6கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 653 ரூபாய் உட்பட மொத்தம் 11 கோடியே 60 லட்சத்து 45 ஆயிரத்து 210 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.