1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2016 (14:06 IST)

புகார் அளிக்க வந்தவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்: இன்ஸ்பெக்டருக்கு சிறை

நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.



 

திருநெல்வேலியை சேர்ந்த ராஜகோபால் மீது சொத்து பிரச்சினை தொடர்பாக அவருடைய மாமனார், கடந்த 2007ம் ஆண்டு நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தார். 
 
இந்த புகார் தொடர்பாக ராஜகோபாலை அழைத்து இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர், ரூ.20 ஆயிரம் கொடுத்தால், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவதாக அவரிடம் இன்ஸ்பெக்டர் கூறி உள்ளார்.

ரூ.10 ஆயிரம் தருவதாக ராஜகோபால் அவரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர், இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர், 
 
லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி, நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர், 
 
இந்த வழக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயசிங் நேற்று தீர்ப்பளித்தார், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தற்போது, அவர் திருச்சி காந்திநகர் மார்க்கெட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.