1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2015 (23:12 IST)

வருவாயை விட சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதுதான் முக்கியம்: ராமதாஸ்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது குறித்த புதிய கொள்கை வகுக்கும் போது வருவாயை ஒரு காரணியாக கொள்ளக் கூடாது என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது குறித்து புதிய கொள்கை வகுத்து, தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதில் உச்சநீதிமன்றம் காட்டும் அக்கறை வரவேற்கத்தக்கதாகும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி நான் தொடங்கிய வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட்டது.
 
மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது, மற்ற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூடுவது ஆகியவை பற்றி முடிவெடுப்பதற்காக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளையும் மூடும்படி நீதிபதிகள் கருத்து தெரிவித்ததுடன், இதுகுறித்து மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டி, புதிய கொள்கையை வகுக்கும்படி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ரோகத்கிக்கு ஆணையிட்டிருந்தது.
 
அதன்படி புதிய கொள்கையை பிப்ரவரி 17 ஆம் தேதி ரோகத்கி தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 6 மாதங்களாகியும் புதிய கொள்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் நேற்று கண்டிப்பாக நீதிமன்றத்தில் நேர்நிற்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர்.
 
அதன்படி அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கெஹர், பாப்டே ஆகியோர், முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேர்நின்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, தாம் தயாரித்த வரைவு அறிக்கை குறித்து விளக்கினார். 2006 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 220 மீட்டர் வரை மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்றும், வருவாயைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் இதற்கு விலக்களிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
 

இதைக் கேட்ட நீதிபதிகள்,‘‘குடிப்பழக்கம் என்பது மிகப்பெரிய சமூக பிரச்சினை; நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களை குடிப்பதற்கு கவர்ந்திழுக்கும் வகையில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது’’ என்று கூறியதுடன் இதுகுறித்து மாநில கலால்துறை ஆணையர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், மதுக்கடை அதிபர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி 2 மாதத்தில் புதிய கொள்கையை வகுக்கும்படி ஆணையிட்டிருக்கின்றனர். இதன்மூலம் சாலையோர மதுக்கடைகளை அகற்றும் விஷயத்தில் தெளிவான கொள்கை வகுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சாலையோரங்களில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றுவதற்கான கொள்கையை உடனடியாக மத்திய அரசு வகுக்க வேண்டும். விரைவில் பிறக்கவிருக்கும் புத்தாண்டு, மதுக்கடைகள் இல்லாத, விபத்துக்கள் இல்லாத நெடுஞ்சாலைகளுடன் தொடங்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நோக்கமாகும்.
 
அதேநேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள இன்னொரு கருத்து தான் மிகவும் நெருடலாக உள்ளது. சாலையோர மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும் என்றாலும், அதனால் அரசுக்கோ, மது வணிகம் செய்பவர்களுக்கோ வருவாய் இழப்பு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அவ்வாறு அகற்றப்படும் மதுக்கடைகளை வேறு இடங்களில் அமைக்கலாம் என்பது தான் நீதிபதிகளின் கருத்து ஆகும்.
 
மிகப்பெரிய சமூகத் தீமையான மதுக்கடைகளை அகற்றுவதில் வருவாய் ஒரு காரணியாக இருக்கக்கூடாது. அது காரணியாக கொள்ளப்பட்டால், அதை காரணம் காட்டியே சாலையோர மதுக்கடைகளை மூடும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப்படும் ஆபத்து உள்ளது. ஏனெனில், ஏதேனும் ஓர் ஓட்டை கிடைத்தால், அதைக் காரணம் காட்டி மக்கள் நலனுக்கான முடிவை செயல்படுத்தாமல் தடுத்து நிறுத்தும் அளவுக்கு மது ஆலை அதிபர்களின் செல்வாக்கு மத்திய அரசில் கொடி கட்டி பறக்கிறது.
 
மதுவை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் அரசு நடத்துவது நல்ல நிர்வாகம் இல்லை. ‘‘பல்லாயிரம் மக்களை குடிக்கச் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதை விட இந்தியா தொடர்ந்து ஏழை நாடாக இருப்பதையே நான் விரும்புகிறேன்’’ என்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் கூறியிருக்கிறார்.
 
சாலையோர மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் மட்டும் கடந்த ஆண்டில் தேசிய அளவில் 7307 சாலை விபத்துக்கள் நடந்து, அவற்றில் 2591 பேர் உயிரிழந்துள்ளனர்;7398 பேர் காயமடைந்துள்ளனர். இவற்றில் 587 விபத்துக்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. இந்த விபத்துக்களில் 582 பேர் காயமடைந்ததுடன், 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது மதுவால் கிடைக்கும் வருமானம் ஒரு பொருட்டே அல்ல.
 
எனவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பாக கொள்கை வகுக்கும் போது வருவாயை ஒரு காரணியாக கொள்ளக் கூடாது. மேலும், இது குறித்த கலந்தாய்வுக் கூட்டங்களுக்கு மது ஆலை அதிபர்கள், மதுக்கடை மற்றும் குடிப்பக உரிமையாளர்களை மத்திய அரசு அழைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.