வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (12:15 IST)

ஈரோடு வனப் பகுதிக்குத் திரும்பிய காட்டெருமைகள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகக் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. 



 
வனப் பகுதி வளம் பெற்றதால் பல்வேறு பகுதிகளில் இருந்து காட்டெருமைகள் தெங்குமரஹடா வனப் பகுதிக்கு வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
ஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்டது அந்தியூர், பர்கூர், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் வனப் பகுதி. இந்த வனப் பகுதியில் புலி, சிறுத்தை, கழுதை புலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறன. 
 
கடந்த சில ஆண்டுகளாக இந்த வனப் பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால் வனப்பகுதி முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டது.
 
இதன் காரணமாக இப்பகுதியில் வாழ்ந்து வந்த வன விலங்குகள் தலமலை, தாளவாடி மற்றும் கர்நாடக வனப் பகுதியை நோக்கி சென்றுவிட்டன.
 
குறிப்பாக காட்டெருமைகள் தண்ணீர் மற்றும் புற்கள் அதிகம் இருக்கும் பகுதிக்குச் சென்றுவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த வனப் பகுதியில் காட்டெருமைகளைக் காண்பது அரிதாக இருந்தது.
 
இங்கு மான்கள் அதிகமாக வசிப்பதால் புலி, சிறுத்தை மற்றும் கழுதை புலிகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. இதனால் இந்த வனப் பகுதி காட்டெருமைகளுக்கு சற்று பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படுகிறது.
 
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வங்ககடலில் ஏற்பட்ட புயல் காரணமாகப் பெய்த தொடர்மழையால் வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியது. மேலும் வன ஓடைகளில் தொடர்ந்து தண்ணீர் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் இந்த வனப் பகுதி வளமாகக் காணப்படுகிறது.
 
இந்நிலையில், வேறு வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்த காட்டெருமைகள் மீண்டும் ஈரோடு மாவட்ட வனப் பகுதிக்கு திரும்பிவிட்டன.