வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 14 நவம்பர் 2015 (11:55 IST)

’தனியார் துறையிலும் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு சட்டம்’ - விடுதலை முன்னணி கோரிக்கை

மத்திய அரசு தனியார் துறையிலும் தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் இயற்றிட வேண்டும் என்று தலித் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி கோரியுள்ளது.
 

 
இதுதொடர்பாக தலித் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், ”டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்காக அம்பேத்கர் மற்றும் அரசியல் சட்டம் குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்காக அமர்வின் முதல் இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
தலித் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி இந்த முடிவை வரவேற்கும் அதே சமயத்தில் இது குறித்து விவாதம் மட்டும் நடத்தினால் போதாது என்று கருதுகிறது. இந்த சிறப்பு கூட்டம் நமது நாட்டிலுள்ள தலித்களின் வாழ்நிலையில் மேன்மையை கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
எனவே அரசு தலித்களின் பிரச்சனைகளை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் மற்றும் அம்பேத்கர் கண்ட கனவான சமூக நீதியை முன்னெடுத்து செல்ல அதற்கான சில சட்டங்களை இயற்றிட வேண்டும் என்று வேண்டுகிறது.
 
அதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் திட்டத்தில் கீழ்க்கண்ட விசயங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளாக முன் வைக்கிறோம்.
 
1) தனியார் துறையில் தலித்களுக்கு இட ஓதுக்கீடு அளிக்க சட்டமொன்றை இயற்றிட வேண்டும். தலித்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலி இடங்களை நிரப்புக. அட்டவணை சாதி மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்திடுக.
 
2)தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து சிறப்பாகஅமல்படுத்திட சட்டமொன்றை இயற்றுக.
 
3) தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு மசோதா 2015ஐ மாநிலங்களவையில் வரும் அமர்வில் இயற்றிட வேண்டும்.
 
4) தீண்டாமையை ஒழித்திட ஒரு சிறப்பு பணித் திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.
 
இந்த சிறப்பு கூட்டத்தை இரண்டுநாட்களுக்கு பதிலாக 5 நாட்கள் நடத்திட வேண்டும் என்று கோருகிறோம் அப்போதுதான் முக்கியமான நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும். தலித்களின் நிலையை மேம்படுத்திட இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்திட நடவடிக்கை எடுத்திட நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.