நியாயமான தீர்ப்புக்காகவே சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியது: கருணாநிதி அறிக்கை

Suresh| Last Updated: சனி, 4 அக்டோபர் 2014 (14:56 IST)
நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் வேறு ஏதாவது உண்டா?

பதில்: உச்ச நீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவங்கள் உண்டு. ஏன், நான் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க. அழகிரி மீதான வழக்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றியது. அண்மைக் காலத்திலேகூட அமித்ஷா பற்றிய வழக்குகளை குஜராத் மாநிலத்திலிருந்து மராட்டிய மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம்தான் மாற்றியது.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கைக் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது கூட, 2003 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற நியாயமான தீர்ப்புக் கிடைக்காது என்ற நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் விடுத்த வேண்டுகோளின் படி, உச்ச நீதிமன்றமே நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கினை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது.
கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்ட பிறகு அதிமுக வினர் ஈடுபட்டுவரும் வன்முறை நடவடிக்கைகளால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை அந்தக் கட்சியின் தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறாரே?

பதில்: உண்மையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துத்தான் அது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட அதிமுகவைத் தடை செய்யவும் தயங்கக் கூடாது என்றும் ஆளுநருக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13-5-2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பேசிய ஜெயலலிதா, “பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களைத் தூண்டுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று தெரிவித்ததை மனத்திலே கொண்டுதான் டாக்டர் ராமதாஸ் தற்போது அதனை நினைவுபடுத்தியிருக்கிறார்.
29-4-2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலே பேசும்போது கூட ஜெயலலிதா, “சட்டம், ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவிதக் கருணையும் இன்றிச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இந்த அரசு தயங்காது“ என்று பேசியதையும் நினைவூட்டிட விரும்புகிறேன்.
கேள்வி: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடக்கும்போது, திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டது குறித்து?

பதில்: திட்டமிட்டு, சென்னை மாநகராட்சியில் இந்தத் தாக்குதல் நடந்ததாக ஏடுகள் தெரிவிக்கின்றன. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகத் திறம்படப் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு இந்தச் சம்பவம் பற்றிக் கூறும்போது, “அது தலைக்குனிவை ஏற்படுத்தக் கூடியது“ என்று தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :