வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2016 (20:01 IST)

17 உயிரிழந்த விபத்திற்கு இதுதான் காரணம்! - ராமதாஸ் விளக்கம்

சாலை குறுகலாகவும், சரிவாகவும் இருந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது என்றும் ஓட்டுனர் போதையில் இருந்திருக்கலாம் என்றொரு காரணமும் கூறப்படுகிறது என்றும் பாமக தலைவர் ராமதாஸ் காரணம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கிருஷ்ணகிரி & ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரூந்தும், சரக்குந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உட்பட 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்தனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்குந்து அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த மகிழுந்து மீது மோதி, சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்சாலையில் வந்து கொண்டிருந்த பேரூந்து மீது மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய பேரூந்து மீது பின்னால் வந்த மகிழுந்தும் மோதியுள்ளது. இச்சாலைவிபத்தில் மொத்தம் 4 வாகனங்களில் வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த கொடிய சாலை விபத்துக்கு அப்பகுதியில் சாலை குறுகலாகவும், சரிவாகவும் இருந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. 
 
கிருஷ்ணகிரி & ஓசூர் சாலையின் இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு உரிய வரையறைக்கு உட்பட்டு இல்லை என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமே ஒப்புக் கொண்டிருக்கிறது.
 
ஆனாலும், அப்பகுதியில் நெடுஞ்சாலையை சரி செய்வதில் காட்டப்பட்ட அலட்சியம் தான் இப்போது 17 உயிர்களை பலி கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான சரக்குந்தில் மது பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால் சரக்குந்து ஓட்டுனர் போதையில் இருந்திருக்கலாம் என்றொரு காரணமும் கூறப்படுகிறது.
 
காரணம் எதுவாக இருந்தாலும் இந்த விபத்தும், உயிரிழப்புகளும் வருந்தத்தக்கவை. இனியும் இதுபோன்ற விபத்துக்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.
 
விபத்து நிகழ்ந்த பகுதியில் நெடுஞ்சாலையை சரி செய்யவும், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்றவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.