தமிழக முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - ராமதாஸ்

Ilavarasan| Last Modified திங்கள், 11 மே 2015 (10:26 IST)
தமிழகப் பொதுப் பணித்துறையில் ஊழல்கள் நிறைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள நிறுவனர் ராமதாஸ், தமிழக முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் பொதுப் பணித்துறையில் அதிக ஊழல் செய்யும் 10 அதிகாரிகள் பட்டியலை பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம் சென்னையில் நேற்று வெளியிட்டு இருக்கிறது. ஊழல் செய்யும் அதிகாரிகளின் பட்டியலை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடும் அளவிற்கு தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
பொதுப்பணித்துறையில் பெருமளவில் ஊழல்கள் நடப்பதாகவும் ஒவ்வொரு ஒப்பந்தம் வழங்குவதற்கும் ஒப்பந்தத்தின் மதிப்பில் குறைந்தபட்சம் 34 சதவீத கையூட்டு தரவேண்டும் என்று ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கட்டாயப்படுத்துவதாகவும் ஒப்பந்ததாரர்கள் நீண்ட நாட்காளகவே குற்றம்சாற்றி வந்தனர். ஆனால் அவர்களின் குற்றச்சாற்று மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இப்போது ஊழல் செய்யும் அதிகாரிகள் பட்டியலை ஒப்பந்ததாரர்கள் வெளியிட்டுள்ளனர்.
இப்படி ஒரு பட்டியல் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக தமிழக ஆட்சியாளர்கள் என்னற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனிக்கும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் ஒப்பந்த தாரர்களை சமாதானப்படுத்தி ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிடாமல் தடுப்பது குறித்து பேச்சு நடத்துவதற்காக உயர் அதிகாரிகள் சிலர் அனுப்பப்பட்டனர்.

பொதுப்பணித் துறையில் ஒப்பந்தம் வழங்குவதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றது உண்மை என்பதற்கும் அதை எப்பாடு பட்டாவது மூடிமறைத்து விட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடிப்பதற்கும் இதுவே சிறந்த ஆதாரம்.

ஊழல் அதிகாரிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களையும் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் வைத்து எந்தெந்த பிரிவுகளில் அதிக ஊழல் நடைபெறுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குழந்தைகள் மருத்துவமனைக்கான கட்டங்களை கட்டுதல், மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டடங்களை கட்டுதல் மருத்துவ சேவைகள் தொடர்பான பிற கட்டடங்களை கட்டுதல் ஆகியவற்றில் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதை இதிலிருந்து யூகிக்க முடிகிறது.
பொதுவாக ஒரு ஒப்பந்தம் வழங்கப்படும் போது திட்டமதிப்பில் 90 சதவீத தொகைக்குள் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு முன்வரும் ஒப்பந்ததாரர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்படும். அந்த தொகையில் 34 சதவீத ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கையூட்டாக வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையில் கட்டங்களை கட்டினால் அவை எந்த அளவுக்கு வலிமையானதாக இருக்கும் என்பதை பாமரர்களால் கூட கணிக்க முடியும். குழந்தைகள் நல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த கட்டடங்கள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய கட்டடங்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்திலேயே ஊழல் செய்து குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் உயிரைக்குடிக்கும் வகையில் வலு வில்லாத கட்டடங்களை கட்டத்தூண்டும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மனித நேயமும் மனசாட்சியும் இல்லாத கல்நெஞ்சக்காரர்களாகத்தான் இருக்க முடியும்.
சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு தொடர்பான கட்டுமான பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளிலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றிருப்பதை ஒப்பந்ததாரர்கள் வெளியிட்ட விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. இந்த ஊழல்கள் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். தமிழக அரசின் ஊழல்கள் குறித்து கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி பாமக சார்பில் தமிழக ஆளுநர் ரோசையாவிடம் ஆதாரங்களுடன் கூடிய 209 பக்க புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் பொதுப் பணித்துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்பந்தங்களை வழங்குவதில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 36,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக ஆதாரங்களுடன் குற்றம் சாற்றி இருந்தோம். எங்களின் அந்த குற்றச்சாற்று உண்மை என்பது இப்போது நிரூபனம் ஆகியிருக்கிறது.

அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து வழக்கு தொடர ஆளுநரின் அனுமதிக்க காத்திருக்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீப்பளித்திருப்பதால் காலதாமதம் செய்யாமல் தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது கையூட்டு தடுப்புச் சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் நடவடிக்கைகளை கண்காணிப்பு மற்றும் கையூட்டு தடுப்பு பிரிவு காவல்துறை மேற்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :