ரஜினி பா.ஜ.க.வுக்கு வந்தால் வரவேற்போம் - தமிழிசை சவுந்தரராஜன்

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (18:29 IST)
ரஜினிகாந்த் பா.ஜ.க.வுக்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்ட பின் அக்கட்சியின் தேசிய தலைவரான அமித் ஷாவை சந்திக்க அவர் இன்று டெல்லி சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

ரஜினிகாந்த் ஏற்கனவே பா.ஜ.க.விற்கு நல்ல நண்பராக உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது அவர் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளது இதற்கு சான்றாகும்.
ஊடகங்களில் ரஜினிகாந்தை பா.ஜ.க.வில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அவரை அடுத்து நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வந்த செய்திகள் பற்றி கேள்வியெழுப்பியபோது, இது ஊடகத் தரப்பு செய்தியே தவிர, அதிகாரப்பூர்வமான செய்தியல்ல என்று தமிழிசை கூறினார்.

மேலும், வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது நதி நீர் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக ரஜினி உறுதியளித்ததையும் சுட்டிக் காட்டிய தமிழிசை, ரஜினியை பா.ஜ.க.வில் இணையுமாறு உள்ளன்போடு அழைப்போம் என்று தெரிவித்தார்.
2016-ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான யுக்தியை வகுக்க தேசிய தலைவரான அமித் ஷாவை முறைப்படி அழைக்க உள்ளதாகவும் தமிழிசை அப்போது தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :