வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (11:31 IST)

ரஜினி என்னும் கோமாளி

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது  இலங்கை பயணம், அரசியல் ஆக்கப்பட்டதால் தனது பயணத்தை கைவிடுவதாக கூறி நீண்ட நெடிய மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். யாரை  முட்டாள் ஆக்க இந்த முயற்சி ரஜினி சார் !  தலைவா ! தலைவா ! என்ற சரணாகதி கோசம் போட்ட தலைமுறை எல்லாம் போயே போய் விட்டது. டிஜிட்டல் தலைமுறைகளின் காலம் இது.


 

அட கிளம்புங்க ஜி ! காத்து வரட்டும் !

வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்காக  லைக்கா  நிறுவன தலைவர் சுபாஷ்கரன், 150 வீடுகளை கட்டி, தனது தாயார் பெயரில் அர்பணிக்கிறார். நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை ! அவர் அன்பானவர் ! கருணை உள்ளவர் தான். ஆனால் நீங்கள் சொல்ல மறந்தது, மறைத்தது,  சுபாஷ்கரனுடன் பெரும் கருணை உள்ளம் கொண்ட ராஜபக்சேவின் மருமகன் கிமல் கெட்டியின் வணிக தொடர்புகள் ?
அது சரி சுபாஷ்கரன் செய்கிறார் ! நீங்கள் என்ன செய்தீர்கள் ! நீங்க உங்க பாக்கெட் இருந்து ஒரு செங்கலாவது எடுத்து வச்சு இருப்பிங்களா ? அட போக ஜி ! காத்து வரட்டும்.

சினிமா வசனம் டா ஸ்வாமி

காலம் காலமாய் வாழ்ந்த, தங்களின் பூமிக்காக, உரிமைக்காக, கவுரவத்திற்காக, லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்த,  தங்களை தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்து மடிந்த இடங்களை பார்த்து, அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க விருப்பம். அடேங்கப்பா என்ன வசனம் ! என்ன நடிப்பு ! உலக மகா நடிப்பு டா ஸ்வாமி !  ரஜினி சார் ! உங்களுக்கு இப்போது தான் தெரிந்ததா வீர பூமியை ? போராளிகளை ? இனம் காக்க தன் உயிர் தந்த மாவீரர்களின் சரித்திர பூமியை ? இப்போது தான் தெரிந்ததா ?

கடல் கடந்து, கண்ணீர் கடந்து, படகு இழந்து, உயிர் துறந்த, மீனவர்கள் பற்றி எல்லாம் நீங்கள் திடீர் ஞானோதயம் கொண்டு பேசுவது எல்லாம் நம்புர மாதிரியா இருக்கு ? அத விடுங்க 100 மீனவர்கள்  நடு கடலில்  வீர மரணம் அடைந்த போது பேசாத நீங்கள், தற்போது மீனவர் நலம் பற்றி, சிறிசேனா விடம் பேச போகிறேன் என்று. ஏன் ரஜினி சார் ! சிறிசேனாவிடம்  பேசுமாறு நேற்று தான் பாபா கனவில் சொன்னாரா ?  

இதுவும்  வீர பூமி தான்

முல்லை  வாயில் முற்றம் மற்றும் வவுனியாவின்  யுத்தம் நடந்த போது நீங்கள் எங்கு போய் இருந்தீர்கள் இமய மலைக்கா ? வயிறு எரியுது சார் ! நீங்க எல்லாம் மா வீரர்கள் பூமி பற்றியும்,  மாவீரர்கள் சரித்திரம் பற்றியும், பேசுவதும். நெடுவாசல் போராட்ட களம் கூட மா வீரர்களின்   களம் தான். டெல்லியில் 13 வது நாளாக போராடுகிறானே அந்த வயதான விவசாயிகள் கூட போராளிகள் தான். வலைத்தளங்களில் மூலம் அறிந்தேன், கண்ணீர் விட்டு அழுத, வயதான அந்த  பெண் விவசாயி கூட போராளி தான். நீங்கள் இலங்கை எல்லாம் போக வேண்டாம் ! இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதேனும் ஒரு வார்த்தை பேசி இருப்பீர்களா என்ன ?

நீ நடிகன் டா

கலைஞன் என்பவன் மக்களை மகிழ்விப்பவன் மட்டும் அல்ல, சிந்திக்க வைப்பவன். அவன் ஜனங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவன். நீங்கள் பேசும் அனைத்திற்கும் கை தட்டு கிடைக்கும் என நினைப்பது முட்டாள்தனம். இந்த உலகம் ஒரு நாடக மேடை என்பதையும், நாம் அனைவரும் நடிகர்கள் என்பதையும்,  மறுபடியும் நீங்கள்  எங்களுக்கு சொல்லி காட்டி இருக்கிறீர்கள்.  வைகோ, திருமா, ராமதாஸ் இவர்கள் சொல்லி தான் நீங்கள் போக வில்லையா என்ன ? அறிக்கை விட்ட  நீங்கள் கோமாளியா ? அறிக்கை கேட்டு சிந்தித்த நாங்கள் கோமாளியா ?


இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]