வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (08:58 IST)

இவரை நல்லவர் என்று முதலில் நினைத்தேன், ஆனால்... - வைகோ ஆதங்கம்

ராஜேஷ் லக்கானி நல்ல அதிகாரி என முதலில் நினைத்தேன். தற்போதுதான் தெரியவந்தது அவர், கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அதிமுகவினருக்கு அணுசரணையாக இருந்துள்ளார் என்று மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
 

 
ஞாயிறன்று காலை மதுரை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடு கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் நடைபெற்றுள்ளது.
 
அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல், முறைகேடு மட்டுமல்ல மக்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிடும் என்றார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணி வெற்றிபெற்று தீர்த்து வைக்கும்.
 
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தலித் மக்களை அழைத்துச் செல்வதற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஆதரவு இருந்தது. ராஜ்குமார் தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். நாங்கள் சாதி வித்தியாசம் பார்ப்பது கிடையாது. அனைத்து சமூக மக்களும் அண்ணன் தம்பியாய் பழக வேண்டும். அனைவரிடமும் நட்புபாராட்ட வேண்டும்.
 
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஊழியர் கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்துவரும் வாகனங்களிலேயே பணத்தை கொடுக்கின்றனர். கூட்டம் நடைபெறும் இடத்திலும் பணம் கொடுக்கின்றனர். தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ்லக்கானி நல்ல அதிகாரி என முதலில் நினைத்தேன். தற்போதுதான் தெரியவந்தது அவர், கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அதிமுகவினருக்கு அணுசரணையாக இருந்துள்ளார்” எனவும் வைகோ குற்றம்சாட்டினார்.