சென்னை மாநகரம், மா‘நரக’மாக மாறியதற்கு யார் காரணம்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


Suresh| Last Updated: வியாழன், 19 நவம்பர் 2015 (16:22 IST)
சென்னை இன்று எதிர்கொள்ளும் சீரழிவுகளுக்கு இவை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் இயல்பு வாழ்க்கை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
 
சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
 
கோடிக்கணக்கில் செலவழித்து வீடு கட்டியவர்கள் வீட்டு மாடியில் நின்றவாறே ஒருவேளை உணவு கிடைக்காதா? என கையேந்தி நிற்கும் காட்சிகள் கண்ணீரை வரவழைப்பவை.
 
1971 ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24.69 லட்சம் ஆகும். சென்னையின் இப்போதைய மக்கள் தொகை 48.28 லட்சம் ஆகும். சென்னை பெருநகரப் பகுதிகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும்.
 
ஆனால், இடைப்பட்ட காலத்தில் சென்னையின் மக்கள் தொகை பெருகிய அளவுக்கு அடிப்படைக் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்பட்டனவா? என்றால் இல்லை என்பது தான் பதில்.
 
1970 ஆம் ஆண்டுகளில் சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள் என 3,000க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 40 ஏரிகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள நீர்நிலைகள் அனைத்தும் கான்க்ரீட் காடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
 
கூவம், அடையாறு ஆகிய இரு ஆறுகள், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட 16 கால்வாய்கள் இயற்கையாக அமைந்திருந்தன. இவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டிருந்தால் சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்து விடும்.
 
ஆனால், இப்போது 2 ஆறுகளும் சாக்கடைகளாக மாற்றப்பற்றதுடன், கால் வாய்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.
 
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒட்டுமொத்த மாநகரமும் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், மழை மூலம் கிடைத்த தண்ணீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் தரும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும்.
 
பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரிகள் நிரம்பி வீணாக கடலில் கலந்த தண்ணீரின் அளவு மட்டும் 25 டி.எம்.சி.க்கும் அதிகம் ஆகும்.
 
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போதெல்லாம் கூடுதல் நீர் வீணாக கடலில் கலப்பது வாடிக்கையாகி விட்டது.
 
இப்போது பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும், பூண்டி ஏரியில் இருந்து 2,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக்கப்பட்டிருக்கிறது.
 
சென்னையின் குடிநீர் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கவும், பருவமழைகளின் போது வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கவும் கூடுதலாக குறைந்தபட்சம் 10 புதிய ஏரிகளாவது அமைக்கப்பட வேண்டும்.
 
ஆனால், 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் ஒரு ஏரியைக் கூட புதிதாக அமைக்கவில்லை. இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றப்போவதாக கூறி இந்த கட்சிகளின் தொலை நோக்குப்பார்வை இவ்வளவுதான். இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :